காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - தீவுத்தெரு சந்திப்பின் கீழ்முனையில் அமைந்துள்ளது முஹம்மதிய்யா இளைஞர் பேரவை - Muhammadiyya Youths’ Organisation (MYO). 1975ஆம் ஆண்டு துவக்கம் கண்ட இப்பேரவையில் ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்கள் மீலாத் விழா நடத்தப்பட்டு, அந்நாட்களில் இரவில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்தது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஒரு நிமிடம் கூட முந்தாது பிந்தாது நிகழ்ச்சிகளைத் துவக்குவது இந்நிர்வாகத்தினரின் தனிச்சிறப்பாக இருந்தது.
காலஞ்சென்ற மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ, சாவன்னா ஷாஹுல் ஹமீத் ஆலிம், எஸ்.எம்.ஐதுரூஸ் ஆலிம், கலீல் அஹ்மத் கீரனூரி ஆகிய மார்க்க அறிஞர்களும், இலங்கை - கண்டியைச் சார்ந்த ஸலாஹுத்தீன் பாரீ எனும் கண்டி ஆலிம் உள்ளிட்டோரும் இங்கு நடைபெறும் மீலாது விழாவில் சன்மார்க்க சொற்பொழிவாற்றிச் சென்றுள்ளனர்.
இங்கு தினமும் செயல்பட்டு வந்த வாசகசாலை, நகரில் நூலக செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றுணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. அன்றாட நாளிதழ்கள், அரிய நூற்களைக் கொண்ட இவ்வாசகசாலையில் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்களுக்கு அனுமதி கிடையாது.
நேர்த்தியாக நடைபெற்று வந்த இந்நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாக செயலிழந்துள்ளது. பராமரிப்பின்றி இருந்த இக்கட்டிட வளாகத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து அதன் உட்பகுதி புதர் போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நண்பகல் 01.45 மணிக்கு இக்கட்டிடத்தின் முன் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது.
அருகில் சென்று பார்த்தபோது, அந்நூலகத்தின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தின் வெளிச்சுவற்றுக்கு உட்புறத்தில் ஹாலோ ப்ளாக் கற்களைக் கொண்டு அறை கட்டப்ப்பட்டிருந்ததைக் கண்ணுற்ற அப்பகுதியைச் சார்ந்த ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஹாஜி எஸ்.ஏ.ஃபாரூக், மவ்லவீ கே.எஸ்.கிழுறு முஹம்மத், ஹாஜி கே.எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், சுலைமானிய்யா செய்கு சுலைமான் உள்ளிட்டோர் கட்டிடம் எழுப்பியது குறித்து கடும் ஆட்சேபனை செய்தனர்.
இதுகுறித்து கட்டிடத்தை எழுப்பியதாகக் கருதப்பட்ட தீவுத்தெருவைச் சார்ந்த முஹம்மத் அலீ என்பவர், MYO அலுவலகம் அமைந்துள்ள இவ்விடம் தீவுத்தெருவைச் சார்ந்த தன் சகோதரியான ராபியத்துல் அதவிய்யாவுக்குச் சொந்தமானது என்றும், தன் தாயார் இருந்த காலத்தில் இந்நூலகம் துவக்கப்பட்டபோது, அலுவலகத்திற்கு அவ்விடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், தாயாரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அலுவலகத்திற்காக சர்ச்சைக்குரிய அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி மட்டுமே தன் தாயாரால் கொடுக்கப்பட்டதாகவும், உரிமையை தாயாரே வைத்திருந்ததாகவும், தம் தரப்புக்கு அவ்விடத்தில் உரிமையுள்ளது என்பதை நிரூபிக்க 1953ஆம் ஆண்டின் பத்திரமும், 1972ஆம் ஆண்டின் பத்திரமும் இருப்பதாகவும், தற்போது தன் சகோதரிக்கு அவ்விடம் தேவைப்படுவதால் அங்கு அறை எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இடம் வட்டமிடப்பட்டுள்ளது.
பல நாட்கள் ஹாஜி பிரபு சுல்தான் இடம் முறையிட்டதாகவும், எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தம்மை அழைக்காமல் காலம் தாழ்த்தியதாலேயே கட்டிடத்தை எழுப்பியதாகவும், தம் தரப்புக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கட்டிடம் எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி பொது நிறுவனம் நடைபெற்ற இடத்தில் திடீரென கட்டிடம் எழுப்புவது தவறான செயல் என்றும், அதுவும் சாலையோர வெளிச்சுவற்றை அப்படியே வைத்துவிட்டு, உட்பகுதியில் ரகசியமாக கட்டிடம் எழுப்பத் தேவையில்லை என்றும், இந்நிறுவனம் தொடர்பான பெரியவர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்ட பின்னரே எதுவும் செய்திருக்க வேண்டும் என்றும் ஆட்சேபித்தவர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக சம்மதிக்க, அவ்விடத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. |