தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணிக்கை, அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்தமான தடையில்லா குடிநீர் வினியோகம், போக்குவரத்து சீரமைப்பு ஆகியவற்றுக்கு தனது பொறுப்புக் காலத்தில் முன்னுரிமை தரப்போவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முனைவர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆர்.செல்வராஜை மரியாதை நிமிர்த்தம் சந்திப்பதற்காக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் அமைப்பின் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இன்று காலை 09.00 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் இல்லம் சென்றனர்.
துவக்கமாக மாவட்டத்தின் புதிய ஆட்சியாளருக்கு குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஆர்.செல்வராஜ், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணிக்கை, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் வினியோகம், மாவட்டம் முழுக்க நெரிசலற்ற போக்குவரத்து ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து தனது பணிகள் அமையும் என்று தெரிவித்தார். பின்னர், காயல்பட்டினம் நகரின் நிலைகள் குறித்து நகர்மன்றத் தலைவரிடம் அவர் கேட்டறிந்தார். |