காயல்பட்டினம் நகரின் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஆண்டுதோறும் க்ரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு சுற்றுப்போட்டிகள், “வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக்” என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் கால்பந்து சுற்றுப்போட்டிகள் 30.05.2011 அன்று காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, 13.06.2011 தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், காலரி பேர்ட்ஸ் அணியும் களம் கண்டன. ஆட்ட முடிவு நேரம் வரை இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காததையடுத்து, சமன் பிரிப்பு முறை கையாளப்பட்டது. இதில், ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கிவைத்தார். எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் ஹாஜி கிழுறு முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார். கலாமீ யாஸர் அரஃபாத் நன்றியுரைக்குப் பின் மேடையில் வீற்றிருந்தோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
பின்னர் வீரர்களுக்கான தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஹாஜி பி.எம்.ரஃபீக், எல்.எஸ்.அப்துல் காதிர் மற்றும் மேடையில் வீற்றிருந்தோர் வழங்கினர். அரையிறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணியினருக்கான பணப்பரிசுகளை ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் வழங்கினார்.
பின்னர், இச்சுற்றுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற காலரி பேர்ட்ஸ் அணிக்கான பணப்பரிசு மற்றும் கோப்பையை ஐக்கிய விளையாட்டு சங்க செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா வழங்கினார்.
இறுதியாக இறுதிப்போட்டியில் வென்ற ஸ்பீட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கான பணப்பரிசு மற்றும் கோப்பையை சிறப்பு விருந்தினர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் காயல்பட்டினம் நகரின் கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்கப்பட்டன. பரிசளிப்பு விழா நிறைவுக்குப் பின் வானவேடிக்கை நடைபெற்றது. |