நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தை வெளியிட்டது. 6400 பள்ளிகளுக்கான கட்டண விபரம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் கட்டணம் பொருந்தும்.
அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவித்த கட்டண விகிதம் பொருந்தாது என்றும் அங்கீகாரம் பெற்ற பின்னர் புதியகட்டணம் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
புதிய கட்டணங்கள் 2010-11, 2011-12, 2012-13 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கு பொருந்தும். புதிய கட்டணங்கள் விபரங்களை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி விபரம் பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோவிந்தராஜன் குழு:
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறைப் படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ்நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கான கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ணயித்தது.
மேல் முறையீடு:
இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு நேரடி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு அளிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்.
மழலையர், தொடக்க, நடு நிலைப்பள்ளிகளுக்கு முதல் கட்டமாக விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கும் ஆய்வு நடந்தது. கடந்த மாதம் 4-ந் தேதி ஆய்வு முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கட்டண குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
சென்னை கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் தனி அலுவலர் திருஞானசம்பந்தம் புதிய கல்வி கட்டண குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு, 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பள்ளி அமைவிடம், மாணவர்கள் எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர், பணியாளர் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் மறு கட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மறு கட்டண நிர்ணய ஆணை அமைந்துள்ளது. இந்த கட்டண நிர்ணய சட்டத்தின் படி அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மறு கட்டண நிர்ணயம் செய்ய பெற்று இருந்தாலும் அங்கீகாரம் பெற்ற பின்னரே அது பொருந்தும். அங்கீகாரகாலம் நிறைவடைந்து 3 ஆண்டு காலம் கடந்தும் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத பள்ளிகளுக்கும், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை.
மேலும் இத்தகைய பள்ளிகளுக்கு 7-5-2010ல் குழு அளித்த நிர்ணய ஆணையும் தற்போது நீக்கம் செய்யப்படுகிறது. மத்திய- மாநில அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு பொருந்தாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஒரு பகுதி அரசு நிதி உதவி பெற்று ஒரு பகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளிகள் கீழ் வருகிறது. அவற்றுக்கு இந்த புதிய கல்விக் கட்டணம் பொருந்தும். தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் வெளியிடப்படுகிறது.
தனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கட்டண விவரம் குறித்த தகவலை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரம் விரைவில் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல்:
www.chennaionline.com |