தூத்துக்குடி - கொழும்பு இடையிலேயான பயணியர் கப்பல் சேவை இன்று (ஜூன் 13) மதியம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. வாரம் இருமுறை இயக்கப்பட உள்ள இந்த சேவையை இன்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் துவக்கி வைத்தார்.
துவக்கிவைத்தப்பின் அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
இந்திய கப்பல்துறை வரலாற்றில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். குறிப்பாக வ.உ. சிதம்பரனார் (தூத்துக்குடி) துறைமுகத்திற்கும், தமிழகத்திற்கும் இது ஒரு சிறப்பான தினமாகும். வ.உசிதம்பரம் பிள்ளையால் 1907 ஆம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட ஒரு சேவை இன்று மீண்டும் துவக்கிவைக்கப்படுகிறது.
இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கும் இது ஒரு பயனுள்ள திட்டமாக இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு பயனுள்ள திட்டமாக இருக்கும். கலாச்சார உறவுகளும், சுற்றுலா மற்றும் தொழில் துறைகளும் இச்சேவையினால் பயன் பெரும். இதன் மூலம் வ.உ.சிதம்பரனார் (தூத்துக்குடி) துறைமுகமும், தூத்துக்குடி நகரமும் பயணியர் கப்பல் சேவை மற்றும் சொகுசு கப்பல்களின் மையமாக உருவாகும்.
1980 களில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் ௦ - தலைமன்னார் பயணியர் கப்பல் சேவையையும் விரைவில் துவக்க ஆயத்தப்பணிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
இந்த கப்பலில் நல்லெண்ண தூதுவர்கள் 80 பேர், 121 பயணிகள் உள்பட 201 பேர் பயணம் செய்கின்றனர். காயல்பட்டின நகரமன்ற தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் மற்றும் அவர் குடும்பத்தினர் 7 பேர் உட்பட சுமார் 25 காயலர்களும் இக்கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் நெல்லை எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை, துறைமுக கழக தலைவர் சுப்பையா, மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி-கொழும்பு இடையே முதல் பயணிகள் கப்பலை இயக்கியவர் வ.உ. சிதம்பரனார். 1907-ம் ஆண்டு எம்.வீ. கலிலியோ, எம்.வி. லாவோ ஆகிய இரண்டு சுதேசி பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கினார். 104 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
புகைப்படங்கள்:
www.tutyonline.com
செய்தி திருத்தப்பட்டது |