""திட்டமிட்டபடி இன்று எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி இத்தரத்தை ஆராய்வதற்காக, முதல்வர் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் செய்த மேல்முறையீட்டு மனுவில், சுப்ரீம் கோர்ட் வல்லுனர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அரசு அறிவித்தப்படி 15.06.2011 (இன்று) திட்டமிட்டபடி எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும். மேலும், கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு, "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்' என்ற முறை எல்லா வகுப்புகளிலும் நடப்பு கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்று முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின்படி, பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல் மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தில், குறிப்பிட்ட வகுப்புகள் முடியும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். எனவே, கல்வி நிறுவனங்கள் எவ்வித குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். தமிழக அரசு கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் எவ்வித குழப்பமும் அடைய வேண்டாம்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (14.06.2011) |