இரண்டு மாதங்களுக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், ஐகோர்ட் அறிவுரைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
தமிழகம் முழுவதும், 63 வட்டார போக்குவரத்து அலுவலகம், 49 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளன. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் சார்பில் மாணவர்களை ஏற்றி வருவதற்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வேன்கள் இயக்கப்படுகின்றன. மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி, வாகனங்களில் மஞ்சள் பெயின்ட் அடித்திருக்க வேண்டும். ஹெவி லைசென்ஸ் எடுத்து பத்தாண்டு அனுபவம் உள்ள டிரைவரே பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்க வேண்டும். நிர்ணயித்துள்ள எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும் என்பது உட்பட வாகனங்களில் பல்வேறு விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் இரண்டு மாதத்துக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. எனவே, விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், மீறியிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கவும், மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், காலை, மாலை நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்லும் ரோட்டில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் நின்று சோதனை மேற்கொள்வோம். அப்போது விதிமீறல் கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தபட்ட கல்வி நிறுவன வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:
தினமலர் (15.06.2011) |