சென்னையில் காயலர் தொண்டு அமைப்பு துவக்குவது குறித்து காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டுக்குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள குழு ஜூலை 3 (ஞாயிறு) அன்று ஆலோசனை கூட்டத்திற்கு சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், காயல்வாசிகள் எங்கெங்கிருந்தபோதிலும் நமதூர் பற்றிய சிந்தனைகளிலும் உதவிபுரிவதிலும் களைப்பின்றி பணி செய்வதில் சளைக்காதவர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் நமதூருக்காக நலமன்றங்கள் அமைத்து செயல்பட்டு வரும் நம் அன்புச் சகோதரர்கள் அச்சிந்தனையை நமக்கும் நினைவு கூறி வருகின்றனர்.
சென்னை வாழ் காயலர்கள் இப்பணியில் நீண்ட காலத் தொடர்புடையவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனடிப்படையில் சென்னைவாசிகளை ஒருங்கிணைத்து கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் செவ்வனே சேவை செய்திட காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டுக்குழு என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த போதிலும் இங்கு கொட்டிகிடக்கும் அளப்பரிய ஆற்றலை ஒருமுகப்படுத்துவதில் இதுவரை நாம் கவனம் செலுத்தாமலே இருந்து வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதத்திலும் பல்வேறு நன்மைகள் நமதூருக்கு கிடைத்திடும் வகையிலும் சென்னையில் நமதூர் சகோதரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கூடி கீழ்காணும் விஷயங்கள் குறித்து தீர்மானித்துள்ளனர்.
அவை
1) நமதூர் மாணவர்களுக்கு சென்னையில் மேல்படிப்புக்கான வழிகாட்டுதல்
2) நமதூரிலிருந்து சென்னைக்கு படித்து வேலை தேடி வரும் சகோதரர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்
3) நமதூரிலிருந்து சென்னைக்கு மருத்துவத்திற்காக வருகை தரும் ஊர் வாசிகளுக்கு உரிய முறையில் வழிகாட்டுதல்
இவை பற்றி மேலும் பல தகவல்களைப் பரிமாறி தகுந்த முடிவுகளை மேற்கொண்டிட அதனதன் துறைசார் வல்லுனர்களை சென்னை காயல் வாசிகளிலிருந்து கண்டறிந்து வருகின்ற 03-07-2011 அன்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில்
Conference Hall-ல் அனைவரும் ஒன்று கூடி இச்சேவைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதெனவும், அதனடிப்படையில் சென்னையிலிருந்தே ஒரு குறிப்பிட்ட பெயரில் நமதூருக்காக செயலாற்றுவதெனவும் முடிவு செய்துள்ளோம்.
எனவே தாங்கள் இந்த அரிய கலந்தாலோசனைக்கு அவசியம் வருகை தந்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கி நமதூரின் நற்பணிகள் மேன்மேலும் சிறக்க உதவிடவும் துஆ செய்யவும் அன்புடன் அழைக்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை எளிதாக்கி ஈருலகிலும் வெற்றியை தந்தருள்வானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்
இவண்
காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டுக்குழு,
சென்னை.
தொடர்புக்கு: 9842185967, 9791117765, 9791450800
ஈமெயில்: kcgcommittee@gmail.com
இவ்வாறு அவ்வறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முக்தார்,
சென்னை.
செய்தி திருத்தப்பட்டது |