தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக்கிய மதங்களை சேர்ந்த அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை நடப்பாண்டுக்கு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி உதவித்தொகைகள் பெறுவதற்கு முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண்கள்(1-ம் வகுப்பு தவிர) பெற்று இருக்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற 4ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வருகிற 11ம் தேதிக்குள்ளும் கிடைக்குமாறு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பது விரும்பத்தக்கது. ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதியதற்கான கேட்பு பட்டியலை வருகிற 20ம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கான பட்டியலை 15ம் தேதிக்குள்ளும், சி.டி.யில் பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உயர்கல்வி உதவித்தொகை:
இதே போன்று சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, ஐ.டி.சி, பாலிடெக்னிக், நர்சிங் டிப்ளமோ, ஆசிரியர் தொழிற் பட்டயபயிற்சி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவித்தொகையை பெற மத்திய அரசால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், மற்றும் பார்சிகள் மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், முந்தை ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும், பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், இதர துறைகள் மற்றும் நல வாரியங்கள் மூலம் 2011-12-ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.
குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனத்தில் புதுப்பித்தல் படிவங்களை வருகிற 4ம் தேதிக்குள்ளும், புதிய படிவங்களை 11ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தகுதியான மாணவ-மாணவிகளின் பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து சி.டி.யில் பதிவு செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு புதுப்பித்தல் பட்டியலை வருகிற 15ம் தேதிக்குள்ளும், புதிய உதவித்தொகை பட்டியலை 25ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ-மாணவிகள் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முன்பணம் ஏதும் இன்றி வங்கி கணக்கு வைத்து இருக்க வேண்டும்.
18 வயதுக்கு குறைவான மாணவ-மாணவிகள் அவர்களின் பெற்றோர், அல்லது பாதுகாவலரின் பெயருடன் இணைத்து கூட்டு கணக்கு தொடங்கி அதன் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.செல்வராஜ் தனதறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் (30.06.2011) |