இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08,09,10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய இலக்கிய கண்காட்சிக்கென தனிக்குழு அமைக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, கண்காட்சியில் இடம்பெறச் செய்வதற்கான அரிய பொருட்கள் நகர மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும், அவை முழு பாதுகாப்புடன் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மாநாட்டு நிகழ்வுகள் நிறைவுற்றதும், அதே பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாட்டு கண்காட்சிக் குழு தலைவர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ்...
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு காயல்பட்டினத்தில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011 ஜூலை 08, 09, 10 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களிலும் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில், இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த புத்தகம் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
பழங்கால கலைப்பொருட்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்து கிதாபுகள், அரபுத்தமிழ் நூல்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல்கள், பழங்கால வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து காட்சிக்கு வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அன்பான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் காயலர்களே...
தங்களிடமுள்ள மேற்படி பொருட்களயும் இக்கண்காட்சியில் இடம்பெறச் செய்திடும் பொருட்டு தேடிப்பார்த்து தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தாங்கள் தரக்கூடிய பொருட்களுக்கு உரிய ஆவனச் சீட்டு (ரசீது) தரப்படும். தாங்கள் தந்த பொருட்கள, மாநாட்டு நிகழ்வுகள் நிறைவுற்றதும் ரசீதைக் காண்பித்து அதே நிலையில் பெற்றுக்கொள்ளலாம்.
ஊரிலில்லாத பொதுமக்கள், உங்கள் இல்லங்களிலிருக்கும் - கண்காட்சியில் இடம்பெறச் செய்திட தகுதியான பொருட்கள் குறித்து, உங்கள் இல்லத்தாருக்குத் தகவல் தெரிவித்து, அவற்றை மாநாட்டு கண்காட்சிக் குழுவினரிடம் முறைப்படி ஒப்படைக்குமாறு ஊக்கமளிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். சிறந்த காட்சிப் பொருளுக்கு மாநாட்டின்போது பரிசும் வழங்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
உங்கள் வசதி கருதி, இதற்கென பகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் முழு விபரங்கள் அடங்கிய பிரசுர நகல் இதனடியில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களிடம் தங்களது கண்காட்சிப் பொருட்கள கொடுத்துதவ அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் பின்வருமாறு:-
|