சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 59ஆவது பொதுக்குழுக் கூட்டம் 24.06.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவும், 59ஆவது பொதுக்குழுவும் ஜனாப்.பாலப்பா அவர்கள் இல்லத்து நீண்ட வரவேற்பு அரங்கில் 24/06/2011 வெள்ளியன்று மாலை ஏழு மணிக்கு நடைபெற்றது.
ஜனாப் .அப்துல்காதர் சூபி அவர்கள் இனிமையான குரலில் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்..அடுத்து இளைய தலைமுறையின் பிரதிநிதியான யூசுப் சாஹிப் (பாலப்பா அவர்களின் பாலகன்) வெகு நேர்த்தியாக ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகான முறையில் வந்தோரை வரவேற்றுப் பேசினார்.
தலைவர் முன்னுரை:
அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் பதினெட்டு ஆண்டு கால நெடிய சமுதாயப்பணியில் தம்மோடு கைகோர்த்த நிர்வாகக் குழுவினருக்கும் பேரன்புக்குரிய மன்றத்து உறுப்பினர் யாவருக்கும் தன நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, இவ்வாண்டு தாம் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விளக்கமாக உரையாற்றினார். அத்துடன் மன்றத்து நிர்வாகத்தின் துணையோடு தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
பொதுச்செயலாளர் உரை:
அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் கடந்த பதினேழு ஆண்டுகளில் மன்றம் ஆற்றிய பணிகள் குறித்து விரிவாய் எடுத்துரைத்தார் .அத்துடன் மன்றத்தின் முக்கிய பொறுப்புகளில் புதிய இளைஞர்கள் பதவியேற்று பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.
தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு கருத்துரை வழங்கினர்:-
சகோதரர் சதக்கத்துல்லாஹ்:
நம் மாணவர்களின் SPOKEN ENGLISH SKILL (ஆங்கில உரையாடல் திறன்) வளர்வதற்காக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் VETA PROGRAMME பற்றி விவரமாகவும் விளக்கமாகவும் எல்லோருக்கும் புரியும்படியும் எடுத்துரைத்தார்.
சகோதரர் சாளை ஜியாவுதீன்:
ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவமும் ஆங்கிலத்தில் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் குறித்து வெகு திறனோடும் தெளிவோடும் தனக்கே உரிய நகைச்சுவையையும் இடைச்செருகல்களையும் கலந்து எல்லோரும் ரசிக்கும் வண்ணம் உரை நிகழ்த்தினார்.
ஜனாப் நூஹு ஆலிம் அவர்கள்:
இறை மறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் ..மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நிம்மதியையும் நெகிழ்வையும் உண்டாக்கியது .
சகோதரர் செய்யது ஹசன்:
நம் மன்ற முக்கிய உறுப்பினர்கள் மட்டும் பண முதலீடு செய்து ஒரு குழுவாக (மன்றத்தின் பெயரில்) நடத்தி வரும் “ சிறப்பு திட்டங்கள்“ (special projects) பற்றிய முழு விவரங்களைக் கூறி, இதுநாள வரை நிறைவேற்றப்பட்ட கல்வி மேம்பாட்டு திட்டம், ஏழைகளுக்கு வீடு பழுது நீக்கி வழங்கும் திட்டம், மருத்துவ திட்டம் (விலை மிகுந்த தடுப்பூசியான ஈரல அழற்சி நோய் HEPATITIS B..VACCINATION முழுமையான மூன்று தடுப்பூசி முகாம்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது) அத்துடன் சமீபத்தில் நடத்திமுடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டுப்புத்தகம் வழங்கல் அடங்கலாக எல்லா விவரங்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்து..... மன்றம் துவங்கி இந்நாள வரை வேகாத வெயிலிலும் வெடவெடக்கும் குளிரிலும் தன் உடல்நலனையும் வருத்தி உறுப்பினர்களையும் உலுப்பி சந்தா வசூலில் சாதனைகள் நிகழ்த்திய மேன்மைக்குரிய மேற்பார்வையாளர் (SUPERVISOR) சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்கள் வெகு தெளிவாகவும் ஆட்டம் இல்லாமலும் உரையாற்றிய பின்பு.. .அன்னாரின் நீண்டகால தொண்டினை வாழ்த்தி ஒரு நினைவுப் பரிசு கண்ணியமிக்க நூஹு ஆலிம் அவர்கள் கரத்தால் வழங்கப்பட்டது. இப்பரிசு சகோதரர் செய்யது ஹசன் ஜாபர் மனமுவந்து அளித்ததாகும்.
பொதுக்குழுவின் முக்கிய அம்சமாக இக்ரா கல்வி நிறுவனத்துக்கு ஆண்டு உறுப்பினர் மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கும் பணி சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரும் மின்னல் வேகத்தில் அந்த இடத்திலேயே உந்துதலோடும் உற்சாகத்தோடும் தம் பணியைத் துவங்கினார்.
தேநீர் சிற்றுண்டிகள் கறிக்கஞ்சி வழங்கப்பட்ட பின்..பொதுச்செயலாளர் தன் நன்றியுரையில் விழாவுக்கு இடம் அளித்தும் தேநீர் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தும் பேராதரவு அளித்த சகோதரர் பாலப்பா அவர்களுக்கும் மகனுக்கு ஊக்கமளித்து வியப்பூட்டும் வகையில் வரவேற்புரை தயார் செய்து கொடுத்து, பாராட்டும் வகையில் பணிபுரிந்த மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி பாலாமினா அவர்களுக்கும், எல்லாக்காலங்களிலும் மன்றத்து விழாக்களில் உவகையுடன் கலந்த தன் உற்சாக உழைப்பை நல்கிடும் சகோதரர் அப்துல் கரீம் மற்றும் அன்னாருடன் ஒத்துழைத்து உறுதுணையாய் நின்ற சகோதரர்கள் மரைக்கார், எம்.எம்.முஹம்மது ஹசன், முத்துவாப்பா, அப்துல் அஜீஸ் , சாஹிப் நவாஸ், முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஆகியோர் அடங்கிய விழாக்குழுவினருக்கும் நிர்வாகக்குழுவின் சார்பில் தன் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இறையருள் துஆவுடன் இரவு உணவும் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.முஹம்மது ஹசன்
மற்றும்
B.A.முத்துவாப்பா
தகவல் தொடர்பாளர்கள் ,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |