உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா மற்றும் மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகிய விழாக்களை, ஜூன் 24, 25 தேதிகளில் நடத்தின.
துவக்க நாளான 24.06.2011 அன்று மாலை 05.00 மணிக்கு பரிசளிப்பு விழா, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.
அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ,
தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ,
தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத்,
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரும், அதனை உருவாக்கியவர்களுள் ஒருவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், 1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தின் முதன்மாணவியாகத் திகழும் ஓசூரைச் சார்ந்த கே.ரேகா தன் பெற்றோருடன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அதுபோல, 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்துகொண்டார்.
இந்திய வணிகத்துறை அமைச்சகத்தின் தேயிலைத் துறை தென்னிந்திய முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்.டி.நஸீம் ஐ.ஏ.எஸ். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், விழா தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையுரையாற்றினார். மாநில சாதனை மாணவி, மாவட்ட - நகர சாதனையாளர்களான காயல்பட்டினம் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கு தனதுரையில் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், இவ்விழாவை நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் செயலருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து, சிறப்பு விருந்தினர் குறித்து இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலருமான பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியருமான எம்.ஏ.புகாரீ அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மாணவரும், நகர சாதனை மதிப்பெண்ணைப் பெற்றவருமான மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா அறிமுகவுரையாற்றியதோடு, இக்ராஃ தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். கல்வி கற்பதன் அவசியம், கற்பதால் விளையும் பலன்கள் குறித்து விளக்கமாக உரையாற்றிய அவர், மாநில சாதனை மாணவி கே.ரேகாவை பெரிதும் பாராட்டினார்.
பின்னர், அவரது பணிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு உருக்கமான நிகழ்வுகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீண்ட நேரம் அறிவுரை வழங்கினார்.
அவரது உரையைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. ஆண்கள், அருகிலுள்ள செய்கு ஹுஸைன் பள்ளியிலும், பெண்கள் மேடை வளாகத்திலும் தொழுகையை நிறைவேற்றி முடித்ததையடுத்து மீண்டும் விழா நிகழ்வுகள் தொடர்ந்தன.
அடுத்து, மாநில சாதனை மாணவி கே.ரேகா, மாவட்ட முதன்மாணவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான ஏ.எச்.அமானுல்லாஹ், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் அரசுப் பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர், தனிப்பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியர், 1200 மொத்த மதிப்பெண்களில் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 73 மாணவ-மாணவியருக்கு பல்வேறு பணப்பரிசுகளும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருது, பணப்பரிசுகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
இறுதியாக, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ நன்றி கூற, துஆவுக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழா நிகழ்ச்சிகளை இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்தளித்தார். விழாவில், நகரின் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியர், அவர்களது பெற்றோர், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் செயற்குழு உறுப்பினர்களும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் ஒருங்கிணைப்பில் அம்மன்றத்தின் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
பரிசளிப்பு நிகழ்வுகள் தனித்தனி செய்திகளாக வெளியிடப்படும். |