சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் “குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி உற்சாகத்துடன் கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் “குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி, சிங்கப்பூரின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான செந்தோஸா பாலவன் கடற்கரையில் 25.06.2011 அன்று மாலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
உறுப்பினர்கள் தமது சந்திப்பிடத்திற்கு குறித்த நேரத்தில் வருகை தந்தனர். இந்நிகழ்ச்சி, மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி மட்டுமேயாதலால் நிகழ்ச்சி நிரல் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.
பொழுதுபோக்கு:
ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட உறுப்பினர்கள் ஒருபுறமும், மகளிர் மறுபுறமும் தமக்கிடையில் குசலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர், ஆண்கள் கால்பந்து விளையாடத் துவங்கினர். மகளிர் தமக்கிடையில் ஊர் நடப்புகள் குறித்து பேசியவாறு தமது நேரத்தை மகிழ்வுடன் கழித்தனர்.
வருங்கால மணமகனுக்கு வாழ்த்து:
பின்னர், வரும் ஜூலை மாதம் திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் செய்யித் லெப்பை மற்றும் செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்யவுள்ள உறுப்பினர் முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோருக்கு அனைவரும் முற்கூட்டியே வாழ்த்து தெரிவித்தனர்.
மஃரிப் வேளை வந்ததும், கடற்கரையிலேயே கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது. மீண்டும் துவங்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் சில மணி நேரம் நீடித்தது.
பலவீட்டுணவு:
பின்னர், மகளிர் தமதில்லங்களிலிருந்து ஆயத்தம் செய்து கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். பல்சுவை விருந்தை உண்டு மகிழ்ந்த உறுப்பினர்கள் அவற்றை ஆயத்தம் செய்த மகளிரை மனதாரப் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.
நிறைவாக, இரவு 10.00 மணிக்கு அனைவரும் இல்லம் திரும்பினர்.
“குடும்ப சங்கமம்” நிகழ்ச்சியின்போது பதிவுசெய்யப்பட்ட படங்களைப் பார்வையிட, http://www.flickr.com//photos/sisshaik/show என்ற இணைப்பிலும், பதிவிறக்கம் செய்ய, http://www.flickr.com//photos/sisshaik என்ற இணைப்பிலும் சொடுக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|