தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர் பதவியை, மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், பேரூராட்சி, கிராம ஊராட்சி ஆகிய அமைப்புகளில், மக்கள் மூலம் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி தலைவர்கள் கீழ், நிர்வாக அமைப்பும் செயல்படும்.
அதிகாரிகளின் கீழ் நிர்வாக அமைப்பு செயல்பட்ட போதும், மக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் கீழ் செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முடிவுப்படி அதிகாரிகள் செயல்படுவதோடு, உள்ளாட்சி அமைப்புகளில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், டெண்டர் ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிக்கும், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட உள்ளாட்சி நிர்வாக அமைப்பில் ஒப்புதல் பெற்றால் மட்டுமே, அதை அதிகாரிகள் செயல்படுத்த முடியும்.
உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை, வார்டுக்கு ஒரு கவுன்சிலர் மற்றும் தலைவர் பதவிக்கு மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படுவார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது முதல், உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.
கடந்த 1986ம் ஆண்டு முதல், 2001ஆம் ஆண்டு வரை அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் இந்த நடைமுறை இருந்து வந்தது. 2006ஆம் ஆண்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் உள்ளாட்சி அமைப்பு தலைவர்களை (ஊராட்சி நீங்கலாக), வார்டு உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.
கடந்த, 2006இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், யூனியன் சேர்மன், பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெரும்பான்மை கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த முறையால் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், கவுன்சிலர்களை விலை கொடுத்து வாங்க, திரைமறைவில் குதிரை பேரம் நடந்தது. இதனால், பெரும்பான்மை பெறாத சில கட்சிகள் கூட பல நகராட்சிகளை கைப்பற்றியது.
இந்த முறையால் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் ஓட்டுக்களை பெற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், பொறுப்புக்கு வந்த பின், நகராட்சி பணிகள் முதல் பல்வேறு வகையில் வருமானங்களில் கமிஷன் கொடுப்பதாக ஒப்பந்தங்கள் நடந்தன.
உள்ளாட்சி அமைப்புகள் நேர்மையாக செயல்பட முடியாத நிலையும், அனைத்து கவுன்சிலர்களுக்கும் உள்ளாட்சி பணிகளில் கமிஷன் கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது. ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை ஐந்தாண்டுகளில் செயல்படுத்த முடியவில்லை.
வரும் அக்டோபர் 24ஆம் தேதியுடன், உள்ளாட்சி அமைப்பு பதவிக் காலம் முடிகிறது. அதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வார்டுகள் ஒதுக்கீடு, புதிய எல்லை வரையறை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த காலங்களை போல், உள்ளாட்சி அமைப்பு தலைவர் பதவியை, தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக, உள்ளாட்சி துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்களை தேர்வு செய்யும் முறையை போல், தலைவர் பதவியை மக்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யும் நடைமுறை குறித்த சட்டம் இயற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கடந்த காலங்களை போல் உள்ளாட்சி அமைப்பு தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
தினமலர் (27.06.2011) |