பொறியியல், ரேங்க் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா, முதலிடத்தை பிடித்தார். சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சுரேஷ் பால்ராஜ், மூன்றாம் இடத்தையும், மகாலஷ்மி எட்டாம் இடத்தையும் பிடித்தனர். 87 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்பிற்கு, தொழிற்கல்வி பிரிவில் 5,566 பேரும், பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 789 பேரும் விண்ணப்பித்திருந்தனர். தொழிற் பிரிவில் 79 விண்ணப்பங்களும், பொதுப்பிரிவில் 5,167 விண்ணப்பங்களும், தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 109 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில் நேற்று காலை, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
பொதுக்கல்வி பிரிவில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த மாணவி திவ்யா, ரேங்க் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். நாமக்கல் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியைச் சேர்ந்த யோகபராசுகன், சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த மாணவர் சுரேஷ் பால்ராஜ் ஆகியோர், முறையே இரண்டு மற்றும்மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். சென்னை, மடிப்பாக்கம் கணேஷ் நகரைச் சேர்ந்த மாணவி மகாலஷ்மி, எட்டாவது இடத்தை பிடித்தார். தொழிற்கல்வி பிரிவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரகாஷ், நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த நெல்சன் பின்னி, கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
தகுதியான விண்ணப்பங்களாக ஏற்கப்பட்ட ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து 109 மாணவர்களுக்கும், ரேங்க் அளிக்கப்பட்டு, அது குறித்த விவரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் (www.annaunivedu/tnea2011/) வெளியிடப்பட்டு உள்ளன. மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தின் எண்களை பதிவு செய்தால், எத்தனையாவது, ரேங்க் கிடைத்துள்ளது என்ற விவரத்தை அறியலாம்.
ரேங்க் பட்டியல் குறித்து, பொறியியல் சேர்க்கைப்பிரிவு செயலர் ரேமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது:
இந்த ஆண்டு 87 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு, 29 மாணவர்கள் மட்டுமே இந்த மதிப்பெண்களை பெற்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும்போது, அவர்கள் தனித்தனியே கணிதத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், இயற்பியலில் பெற்ற மதிப்பெண் சதவீதம், நான்காவது விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், பிறந்த தேதி (வயதில்மூத்தவர்களுக்கு முன்னுரிமை), ரேண்டம் எண் (உயர்ந்த மதிப்புள்ள எண்ணுக்கு முன்னுரிமை) ஆகியவற்றின் அடிப்படையில், தர வரிசைப் பட்டியலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 17 மாணவர்களுக்கு, ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஒன்பது மாணவர்களுக்கு மட்டுமே, ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு ரேமண்ட் உத்திரியராஜ் கூறினார்.
பொறியியல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு 87 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், அவர்களின் இதர பாடங்களில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தரவரிசை படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் இடம் பெற்ற யோக பராசுகன், 1993ம் ஆண்டு, செப்டம்பர் 22ம் தேதி பிறந்துள்ளார். இதே ஆண்டில் ஜூலை 9ம் தேதி பிறந்த திவ்யா, முதலிடத்தை பிடித்து உள்ளார். இந்த ஆண்டு, கடைசி, கட்-ஆப் மதிப்பெண் 85. பொதுக்கல்வி பிரிவில், முதல் பத்து இடங்களில், எட்டு இடங்களை, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர்.
தகவல்:
தினமலர் |