காயல்பட்டினம் எல்.எஃப்.ரோட்டில் நகராட்சி மூலம் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தக் கோரி, காயல்பட்டினம் நல அறக்கட்டளை அமைப்பின் சார்பில் நகர்மன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்களிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நமதூர் LF ரோடு பகுதியில் பல மாதங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் இன்று மலைபோல காட்சியளிக்கின்றது. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்றெல்லாம் எந்த பாகுபாடுகளுமின்றி நமதூரின் அனைத்து அசுத்தங்களும், கழிவுகளும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருவதையும், நமது நகராட்சி ஊழியராலேயே அவைகளை தினமும் தீவைத்து கொளுத்தப்படுவதையும் தாங்களும் அறிவீர்கள்.
காலை நேரங்களில் எரியத்துவங்கும் இக்குப்பைகள் இரவு விடியவிடிய எரிந்து அப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் எங்கள் அமைப்பை நேரில் அணுகியும், எழுத்துப்பூர்வமான கோரிக்கை மூலமும் தகவல் அளித்துள்ளனர்.
மேற்படி எரிக்கப்படும் குப்பைகளால் LF ரோடு பகுதி பொதுமக்கள் அடையும் பாதிப்புக்கள் பின்வருமாறு:-
1. இப்பகுதியில் சிறு குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா என்னும் கொடிய நோய் சமீபத்தில் அதிகமாக பரவி வருகிறது
2. குப்பை எரிப்பினால் உண்டாகும் கரும்புகையின் காரணமாக கண்எரிச்சல், இருமல், தொடர் தும்மல், மற்றும் தொண்டை பிரச்சனைகளால் மக்களை பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
3. பெருகிவிட்ட இக்குப்பைகள் மற்றும் அசுத்தங்களைத் தேடி LF ரோடு பகுதியில் பன்றிகள் பல வந்துவிட்டன. அப்பன்றிகள் அப்பகுதியிலேயே தங்கி இனப்பெருக்கமும் செய்து பெரும் கேடுகளை உண்டாக்குகிறது.
4. இக்குப்பை எரிப்பினால் உண்டாகும் புகை இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பல சிரமத்தை அளிக்கிறது.
மேற்காணும் சிரமங்களையும், சுகாதாரக்கேடுகளையும் கருத்தில்கொண்டு குவிக்கப்படும் அக்குப்பைகளை அப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கு நகராட்சியின் தலைவர் ஜனாப் செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் தமது பொறுப்பில் உள்ள மாற்று இடத்தை அளிக்க முன்வந்தும், சம்பந்தப்பட்ட அரசு துறை அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறோம்.
மேற்படி குப்பை குவிப்பு மற்றும் குப்பை எரிப்பு சம்பவம் LF ரோடு பகுதிக்குட்பட்ட பிரச்சனை அல்ல மாறாக இது நகரின் ஒட்டுமொத்த பொதுமக்களின் சுகாதார சீர்கேட்டு பிரச்சனையாக உருவெடுக்கிறது என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகிறோம். எண்ணிலா தொல்லைகள் தரும் மேற்படி குப்பைகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் வீரியமிக்க போராட்டங்களை நடத்துவதென்று குமுறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்தான், மக்கள் சேவைகளை முன்னிருத்தி துவங்கப்பட்டுள்ள நமது காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் சார்பாக இவ்விஷயத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
எனவே அப்பகுதியில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் குப்பைகளால் ஏற்படும் பெரும் சுகாதாரக்கேட்டை முழுவதுமாக தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ வழிசெய்திடுமாறு வேண்டுகிறோம். LF ரோடு வட்டாரம் முன்னா; இருந்ததைப் போல சுத்தமான, சுகாதாரமான சுற்றுப்புறத்துடன் திகழ்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளுமாறும் மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விஷயத்தில் நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு தந்து உங்களோடு தோளோடு தோள் நிற்பதற்கு காயல்பட்டினம் நல அறக்கட்டளை தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுடன் காயல்பட்டினம் நல அறக்கட்டளை நிர்வாகிகள் பேசியபோது, இவ்விஷயத்தில் உள்ள தீவினைகளைக் கருத்தில் கொண்டு தனக்குச் சொந்தமான இடத்தைத் தருவதாகவும், அங்கு குப்பையை தகுந்த முறைப்படி கொட்டுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நகர்மன்ற அதிகாரிகள் அதுகுறித்து எந்த அக்கறையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
தாம் முன்னின்று அக்காரியம் நிறைவேறும் வரை போராடுவதாக காயல்பட்டினம் நல அறக்கட்டளை நிர்வாகிகள் அப்போது தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு தனதிடத்தில் குப்பை மாற்றிக்கொட்டப்படுவதாக இருந்தால், அவ்விடத்தில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடுகளுக்கான செலவினங்களுக்கு அறக்கட்டளை பொறுப்பேற்குமாறு நகர்மன்றத் தலைவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |