தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். ஷேக் முகமது அலி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதன் விவரம்:
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலும், பிறகு நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. எனினும், அந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பெரும்பாலான பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதில்லை.
குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக ஊடகங்களில் பல செய்திகள் வருகின்றன. நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகக் கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தி, அந்தப் பள்ளிகள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பள்ளி நிர்வாகங்களால் வசூல் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபர் குழு ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்னிலையில் புதன்கிழமை மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
நன்றி:
தினமணி (23.06.2011) |