இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜூன் 05ஆம் தேதியன்று கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பிறந்த நாளை கல்வி தினமாக அறிவித்து, திறமையான மாணவர்களை ஊக்குவிக்கவும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.
மேல்நிலை உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் 18.06.2011 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2, 10ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் அரசு பொதுத் தேர்வுகளில், முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தேர்வெழுதிய மாணவர்களில் மாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர், மாணவியரில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு இப்பணப்பரிசு வழங்கப்பட்டது.
ப்ளஸ் 2 தேர்வில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் முஸ்லிம் மாணவர்களுள் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள் 1200க்கு 1177.
அதுபோல, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி எஸ்.எம்.ஆயிஷா ஷரஃபிய்யா, 10ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வில் முஸ்லிம் மாணவியருள் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் 500க்கு 490.
இவர்களுக்கு, 18.06.2011 அன்று திருச்சியில் நடைபெற்ற காயிதேமில்லத் பிறந்தநாள் விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பணப்பரிசுகளை வழங்கினார்.
முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். |