தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.,) மூலம், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தடுக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிரத்யேக எண்களை வழங்க தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
தொலைபேசி மற்றும் மொபைல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, சில தனியார் டெலிமார்கெட்டிங் நிறுவனங்கள், தங்கள் வியாபாரம் தொடர்பான விளம்பரங்களை தொலைபேசி, மொபைல்போன் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக செய்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் கடும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதைத் தடுக்க, குறிப்பிட்ட எண்களில் இருந்து மட்டும் விளம்பர அழைப்புகளை செய்யும் வகையில், தனியார் மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு பிரத்யேக எண்கள் வழங்க முடிவு செய்துள்ளது. டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு 140 என்ற வரிசையில் தொடங்கும் வகையில், தொலைபேசி எண்களும், மொபைல்போன் எண்களும் வழங்கப்படும். இந்த பிரத்யேக எண்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இந்த பிரத்யேக எண்களில் இருந்துதான் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால், இந்த சேவையை தொடரலாம்.
ஆனால், இதை தொல்லை தரும் அழைப்பாக கருதி, வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு முதலில் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது தடவை தேவையற்ற அழைப்பை அனுப்பினால், ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை ரூ. 80 ஆயிரமும், நான்காவது தடவை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது தடவை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், ஆறாவது தடவை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
நன்றி:
தினமலர் (23.06.2011) |