கேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றம் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் சட்டதிட்டங்கள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மலபார் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 19.06.2011 அன்று மாலை சரியாக 05.00 மணிக்கு சகோதரர் நெய்னா அவர்கள் வீட்டு மாடியில் நடைபெற்றது.
தேனீர் விருந்து:
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் அன்று மாலையில் குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெறுமிடத்தை வந்தடைந்தனர். அனைவருக்கும் தேநீர் விநியோகிக்கப்பட்டது. அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான இரவு உணவு ஏற்பாடுகள் மறுபுறம் விமரிசையாகவும், பரபரப்போடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கூட்ட நிகழ்வுகள்:
மன்ற தலைவர் ஜனாப் மசூத் அவர்கள் தலைமையில் கூட்டம் துவங்கியது. இறைமறை குர்அனின் இனிய வசனங்களை தனதினிய குரலில் கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் ஜனாப் சாமு ஷிஹாபுத்தீன் அவர்கள்.
மன்றத் தலைவரின் வரவேற்புரை:
மன்றத் தலைவர் ஜனாப் மசூத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அழைப்பையேற்று பெருந்திரளாக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அவர் தனது உரையில், இறைவன் ஒருவன் என்ற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையையும் அவனை அன்றி வணக்கத்திற்குரிய நாயகன் யாரும் இல்லை என்ற திருமறை வசனத்தையும் நபிகளாரின் பொன் மொழிகளையும் கூட்டத்திற்கு விரிவாக எடுத்து கூறினார்.
மன்ற செயலாளரின் சிறப்புரை:
மன்ற செயலாளர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள், மன்றம் இதுவரை செய்த நகர்நலப் பணிகள், மருத்துவ உதவிகள் அனைத்தையும் பட்டியலிட்டு கூட்டத்தில் விளக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதில் நாம் ஒன்றாக செயல்பட வேண்டியத்தின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார். உறுப்பினர்கள் அனைவர்களும் அவரது உரையின் முக்கியத்துவத்தை உணர்த்து ஆர்வமுடன் செவிமடுத்தனர்.
நிதிநிலை அறிக்கை:
மன்றத் செயலாளரின் உரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் மன்றத்தால், நிறைவேற்றி முடிக்கப்பட்ட செயல்திட்டங்களடங்கிய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மன்றத்தின் வரவு-செலவுகளை கருத்திற்கொண்டு காரியங்களாற்றிடும் பொருட்டு பொருளாளர் உதுமான் அப்துர் ராஜிக், வருங்கால செயல்திட்டங்களுக்கு நிதியுதவி மிகவும் முக்கியமானது என்பதையும் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எடுத்துக் கூறினார்.
பின்னர் 19.06.2011 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் சமர்ப்பித்தார். மன்றம் துவங்கி இன்று வரை, மன்றத்தின் சார்பில் சுமார் ரூபாய் 60,000/- மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டுள்ளதை அப்போது அவர் தெரிவித்தார். பொருளாளர் அறிவித்த அக்கணக்கறிக்கையை ஒருமனதாக பொதுக்குழு அப்படியே அங்கீகரித்தது.
பின்னர் மக்ரிப் ஜமாஅத்திற்காக கூட்டம் இடைநிறுத்தம் செய்யபட்டது. இரண்டாம் அமர்வு மக்ரிப் ஜமாஅததுக்கு பின் துவங்கியது.
சாதனை மாணவிக்கு பரிசளிப்பு:
இவ்வமர்வில், அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகளின் படி, கோழிக்கோடு (கேரளா) ஹில்டாப் மேனிலைப்பள்ளியில் பயின்று, பள்ளியளவில் முதலிடம் பெற்ற - (MKWA மன்ற செயலாளர்) ஜனாப் செய்யது ஹைதுரூஸ் M.A.K., முஹம்மது மரியம் S.E ஆகியோரின் மகள் அமான S.H. என்ற சாதனை மாணவியை பாராட்டி மன்றத்தின் சார்பில் அன்பளிப்பும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
பின்னர் ஏற்புரை வழங்கிய சாதனை மாணவி, தான் ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணராக (GYNECOLOGIST) உருவாக வேண்டுமென்பதே தனது குறிக்கோள் எனவும், அதற்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை:
பின்னர், செயற்குழு உறுப்பினர் ஜனாப் செய்யது அஹமது U.L அவர்களும் பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் அஷ்ரப் அவர்களும் சாதனை மாணவியை வாழ்த்திப் பேசினர். அத்துடன் பரிசளிப்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர், நூல் வடிவில் அச்சிடப்பட்டிருந்த மன்றத்தின் சட்டதிட்டங்கள் (பைளா) கூட்டத்தில் வெளியிடப்பட்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
கேள்வி நேரம்:
பின்னர், மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கென 30 நிமிடங்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்றத் தலைவரும், அவரைத் தொடர்ந்து, செயலாளரும் நிதானமாக பதில் அளித்தனர்.
MKWAவின் கவுரவ ஆலோசகர்களான ஜனாப் கிதுறு முஹைதீன் (KRS), ஜனாப் ஜனாப் ஷாகுல் ஹமீது (Ameen Tools) ஆகியோர் இக்கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
துணை தலைவர் முஹம்மது ரபீக், துணை செயலாளர் அப்துல் காதிர் NM, செயற்குழு உறுப்பினர் உதுமான் LIMRA,உமர் லக்கி, கவுரவ ஆலோசகர் ஜனாப் ஷாகுல் ஹமீது (Ameen Tools) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். செயற்குழு உறுப்பினர் செய்யது ஐதுரூஸ் S.E (சீனா)
அவர்களின் நன்றியுரையுடனும், உறுப்பினர்களின் பிரார்த்தனையுடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
விருந்தோம்பல்:
கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாலை ஐந்து மணிக்குத் துவங்கிய கூட்டத்தின் துவக்கத்தில் தேநீரும், பிஸ்கட்டும் விநியோகம் செய்யப்பட்டு, இடையில் மக்ரிப் ஜமாஅததுக்கு இடை நிறுத்தம் செய்யபட்டன.
இரவு எட்டு மணிக்கு கூட்டம் முடிவுபெற்ற பிறகு இந்த பொதுக்குழுவுக்கென பிரத்தியேகமாக தேர்வு செய்யப்பட்ட உணவு கமிட்டி உறுப்பினர்களான ஆப்தீன் பாய், உமர் லக்கி, ரஹ்மத்துல்லாஹ், உதுமான் லிம்ரா, சாஹிப் தம்பி, செல்வம் ஆகியோரின் தயாரிப்பில் சுவையான இடியாப்ப பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்ற நிர்வாகத்தின் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட கூட்ட நிகழ்வுகளின் அனைத்துப் புகைப்படங்களையும் காண இங்கே சொடுக்குக!
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா)
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு, கேரள மாநிலம். |