மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்ததை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமும், கட்டண நிர்ணயக் குழுவிடமும் புகார் அளிக்கலாம்.
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை எதிர்த்து 6,400 அதிகமான பள்ளிகள் மேல்முறையீடு செய்திருந்தன.
நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இந்த மனுக்களை 6 மாதங்களாக விசாரணை நடத்தி புதிய கட்டண விகிதத்தை நிர்ணயித்தது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் சம்பளம், நூலகம் உள்ளிட்ட வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண நிர்ணயத்துக்கும் அதிகமாக கட்டணத்தை பள்ளிகள் வசூலித்தாலோ அல்லது மாணவர்கள், பெற்றோர்களை வற்புறுத்தினாலோ அவர்கள் புகார் செய்யலாம்.
இதுதொடர்பாக, கட்டண நிர்ணயக் குழு அதிகாரிகள் கூறியது:-
தனியார் பள்ளிகளின் அனைத்து செலவினங்களையும் பரிசீலித்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை நடத்தும் அளவுக்கும், பெற்றோர்கள் செலுத்தும் அளவுக்கும் இந்தக் கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்துமாறு பள்ளிகள், மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், தனியார் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவினரிடம் புகார் அளிக்கலாம்.
கட்டண நிர்ணயக் குழுவிடம் அளிக்கப்படும் புகார்கள் உண்மைதானா என்பது குறித்து விசாரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அது அனுப்பப்படும். அந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்ட பிறகு, பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு அரசுக்குக் குழு பரிந்துரைக்கும்.
இவ்வாறு கட்டண நிர்ணயக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு பள்ளிகளுக்கு நோட்டீஸ்:
சென்னையில் அதிகக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களை தனிமைப்படுத்தியாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல், வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியிலும் மாணவர்களை துன்புறுத்துவதாகப் புகார் கூறப்பட்டது. இந்த இரண்டு பள்ளிகளிலும், பள்ளி நிர்வாகம் சொல்லும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தில் பெற்றோர்கள் திங்கள்கிழமை புகார் அளித்தனர். இந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தேவராஜன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெற்றோர்கள் போராட்டம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகக் கட்டணம் கோருவதாகக் கூறி சென்னை கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் பள்ளிகள் முன் உண்ணாவிரதம் இருந்தனர். சில இடங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
நன்றி:
தினமணி (21.06.2011) |