சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில், கலைஞர் "டிவி' சின்னம் போல் இடம்பெற்ற சூரியன் படம், சென்னை சங்கமம் போன்ற வாசகங்களை நீக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பகுதிகள் நீக்கப்பட்ட பின், மாணவ, மாணவியருக்கு புத்தகம் வழங்கப்பட உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, "சமச்சீர் பாடத்திட்டம் தரமானதாக இல்லை. திருத்தம் செய்த பின் அத்திட்டம் அமலுக்கு வரும்' என, கூறி நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட், இடைக்கால தடை விதித்தது.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. "பாட நூல்களின் தரம் ஆராய தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து, ஜூலை 6ம் தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள உத்தரவில், "நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தின் பின்பக்க அட்டையில் உள்ள செம்மொழி சின்னத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த பின்னும், ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களில் குறிப்பிட்ட பகுதிகள் நீக்கம் செய்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யுமாறு, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, திருச்சிக்கு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்களில் முதல் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், 69, 70, 79, 80, ஆங்கிலம் பாடப்புத்தகத்தில், 53, 54 ஆகிய பக்கங்கள் கிழிக்கப்பட்டன. ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 56ஆம் பக்கம் அப்துல் ரகுமான் எழுதிய கவிதை பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. "தைத்தமிழ் புத்தாண்டே வருகை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ள, 129, 130ஆம் பக்கம் கிழிக்கப்பட்டது. ஆங்கில புத்தகத்தில், 2ஆம் பக்கம் சென்னை சங்கமம் பற்றி இடம் பெற்ற வரிகளை, "மார்க்கர்' பேனாவால் அழிக்கப்பட்டது. அறிவியல் பாடத்தில், 81ஆம் பக்கத்தில் இடம் பெற்ற, "சட்ட காந்தம்' படம் ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்பட்டது. அதேபோல், ஆங்கில வழி அறிவியல் புத்தகத்திலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
தமிழ் வழி சமூக அறிவியல் புத்தகத்தில், "ஏழை எளியோருக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்' குறிப்பிட்ட, 11ஆம் பக்கம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 12ஆம் பக்கத்தில், "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்' வரியை நிரந்தர, "மார்க்கர்' பேனா வைத்து அழிக்கப்பட்டது. 17ஆம் பக்கத்தில், "அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மார்க்கர் பேனா மூலம் அழிக்கப்பட்டது.
24ஆம் பக்கத்தில், "நல்ல திட்டங்களை அறிவித்து வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது' என்ற வரியும், 35ஆம் பக்கத்தில், கலைஞர் "டிவி' சின்னம் போல் உள்ள சூரியனும், 82ஆம் பக்கத்தில், "தமிழக முதல்வர் கலைஞரின் கருத்தை ஏற்று கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்துள்ளது. இதிலிருந்து தமிழின் இணையற்ற சிறப்பு விளங்கும்' என்பவை மார்க்கர் பேனாவால் ஆசிரியர்கள் அழித்தனர். இப்பணி, புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை முதல் நடந்தது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் குறிப்பிட்டது போல் அகற்றப்பட்ட சமச்சீர் கல்வி புத்தகம் இன்று, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
தினமலர் (20.06.2011) |