காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வட்டாரத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு அப்பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிப்பாடக் குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதற்கான சிறப்பு நிகழ்ச்சி 19.06.2011 (நேற்று) மாலை 05.00 மணிக்கு கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வெளிவளாகத்தில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஹாஜி அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, கற்புடையார் பள்ளி வட்டம் கிறிஸ்துவ சமுதாயக் கூட்டமைப்பின் தலைவர் சேவியர், அதன் பொருளாளர் சூசை ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தீனிய்யாத் பிரிவு மாணவர் ஆஷிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை பொறுப்பாளர் மவ்லவீ சுலைமான் மன்பஈ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், இப்பள்ளியில் வாரந்தோறும் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தீனிய்யாத் எனும் மார்க்க ஒழுக்கப் பயிற்சி வகுப்பிற்கு தவறாமல் வருகை தந்த மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கற்புடையார் பள்ளி வட்டத்தைச் சார்ந்த சுமார் 30 கிறிஸ்துவ மாணவ-மாணவியர் உள்ளிட்ட - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 110 மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள், ஸ்கூல் பேக், எழுதுபொருட்கள் உள்ளிட்டவையடங்கிய பொதி இலவசமாக வழங்கப்பட்டது.
அவற்றை, நிகழ்ச்சித் தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஹாஜி அபூபக்கர், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, சேவியர், சூசை ராயப்பன், ஜெஸ்மின் கலீல், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், கோமான் லுக்மான், அ.வஹீதா மற்றும் பலர் வழங்கினர்.
இப்பொருட்களுக்கான செலவுகளுக்கு, தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், காயல்பட்டினம் மஃப்தூஹா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஸாலிஹ் ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.
இறுதியாக பள்ளி பொருளாளர் கோமான் மீரான் நன்றி கூற, பள்ளி இமாம் அரபி அமானுல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை பள்ளி துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்து வழங்கினார்.
காயல்பட்டினம் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கறிகஞ்சி வழங்கி உபசரிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டு முதல் பள்ளி வளாகத்திலேயே நோன்புக் கஞ்சி ஏற்பாடு செய்து வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ரமழான் மாதத்திலும் அதுபோன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளதென்றும், ஒருநாள செலவாக ரூ.5,000 தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பமுள்ளோர் நிகழ்ச்சியிலேயே பெயர் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் நிகழ்ச்சியின்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் பலனாக, அந்த இடத்திலேயே ஐந்து நாட்களுக்கான செலவினங்களுக்கு அனுசரணையாளர்கள் தமது பெயர்களைப் பதிவுசெய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை தலைமையில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் ஒருங்கிணைப்பில் அதன் அங்கத்தினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், ரமழான் கஞ்சி ஏற்பாடு குறித்து பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான் தெரிவிக்கையில்,
நடப்பாண்டு ரமழான் மாத கஞ்சி ஏற்பாட்டிற்காக 5 தினங்களுக்கு இந்நிகழ்ச்சியின்போது அனுசரணை பெறப்பட்டுள்ளது. எஞ்சிய 25 தினங்களுக்கான அனுசரணையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்...
நமதூரின் மற்ற பள்ளிவாசல்களைப் போல இப்பள்ளிக்கென பொருளாதார வளம் கொண்டோர் யாரும் இல்லாத நிலையில், நகர மக்களாகிய நாம்தான் இதற்கு உதவ்வேண்டிய நிலையுள்ளது...
எனவே, இச்செய்தியைப் பார்க்கும் காயலர்கள் உங்கள் குடும்பத்திற்கான ஒரு செலவாக இதைக் கருதி இச்செய்தியின் அடியிலேயே உங்கள் உங்கள் அனுசரணை குறித்து விபரங்களுடன் தெரிவித்தால், உங்கள் இல்லம் தேடிச் சென்று நாங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் இதுபோன்ற அரிய நற்காரியங்களுக்கு உதவுவதன் மூலம் நம் ஹலாலான நாட்டதேட்டங்களை நிறைவாக நிறைவேற்றித் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். |