நகர சாதனை மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ரூ.75,000 பணப்பரிசு திட்டத்தில் இணைவதென்றும், காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்குவதென்றும், சிங்கை காயல் நல மன்றத்தின் அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அவசரக் கூட்டம் 20.06.2011 அன்று (நேற்று) மாலை 06.30 மணிக்கு, மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையிலும், மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் முன்னிலையிலும், மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:-
நகர சாதனை மதிப்பெண் பெற்ற மாணவருக்கான பணப்பரிசு திட்டத்தில் இணைதல்:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து எதிர்வரும் 24.06.2011 அன்று “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
இந்நிகழ்ச்சியின்போது, நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் நகர சாதனை மதிப்பெண்ணை முறியடித்து, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு, உலக காயல் நல மன்றங்களின் சார்பில் ரூ.75,000 பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
இப்பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தில், சிங்கப்பூர் காயல் நல மன்றம் இணைவதென்றும், இவ்வகைக்காக ரூ.15,000 அனுசரணையளிப்பதென முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், சாதனை மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினரான ஏ.எச்.அஸ்ஹரின் சகோதரர் என்பதால், மன்றத்தின் சார்பில் அவரை தனிப்பட்ட முறையிலும் பணப்பரிசு வழங்கி கவுரவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினத்தில் வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டிற்கு ஒத்துழைப்பளிப்பதெனவும், அதன் ஒரு பகுதியாக, மாநாட்டையொட்டி வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு மன்றத்தின் சார்பில் விளம்பர ஒத்துழைப்பு வழங்குவதென்றும், இதர பொருளாதார ஒத்துழைப்புகளையும் செய்வதென்றும் முடிவு செய்ப்பட்டது.
ஜூன் 25 “குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி:
25.06.2011 அன்று, “சிங்கை காயலர் குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி மன்றத்தால் சிறப்புற நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பாக,
முஹம்மத் அப்துல்லாஹ்,
சிங்கப்பூர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |