"சமச்சீர் கல்வி திட்ட வழக்கு முடிவடையும் வரை, பாடப்புத்தகங்களில் நீக்கிய தாள்களை, எரிக்கக் கூடாது' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மூலம், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கு, ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில், "செம்மொழி மாநாடு' மற்றும் சில ஆட்சேபகரமான பகுதிகள், ஆசிரியர்களால் நீக்கப்பட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி, பள்ளி கல்வித் துறை செயலர், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு, நிலுவையில் உள்ளது. ஜூலை 15ஆம் தேதி, வழக்கு முடியும் வரை, பாடப்புத்தகங்களில் இருந்து தேவையற்றவை என்று ஒதுக்கப்படும் பொருட்கள் உட்பட, எந்த ஒரு பொருளையும் அகற்றவோ, எரிக்கவோ கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்பாசிரியர்கள், பாட வாரியாக பாடம் நடத்த வேண்டிய, 154 பக்கங்கள் கொண்ட, "இணைப்பு பயிற்சி' புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின் பேரில், வகுப்பாசிரியர்கள் அனைவரும் தவறாமல் இப்புத்தகத்தை, நகல் எடுத்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (22.06.2011) |