"மொபைல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றி கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பது பற்றி ஆய்வு நடத்த, நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக, மேற்கு வங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சுதர்சன் கோஷ் கூறியதாவது:-
மொபைல்போன் கோபுரத்தில் இருந்து 50 முதல் 300 மீட்டர் தூரம் வரையிலும் மின்காந்த கதிரியக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து, விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரிடம் தீவிர பரிசோதனை மேற்கொண்டதில், அவர்கள் வசித்த வீடுகள் மொபைல்போன் கோபுரங்களை நோக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மொபைல்போன் கோபுரத்திலிருந்து வந்த மின்காந்த கதிர்வீச்சால் பதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் மேற்கு வங்க சுற்றுச்சூழல் துறை தீவிர கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்த, கோரக்பூர் மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த சுற்றுச்சூழல்துறை பேராசிரியர்கள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மொபைல்போன் கோபுரங்கள் அனைத்தும், முறைப்படி நிறுவப்படுகின்றனவா என்பதை, மொபைல்போன் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். மொபைல்போன் கோபுரங்களில் இடம்பெற்றுள்ள ஆன்டெனா, ஆம்ப்ளிபயர் போன்றவற்றின் மாதிரி வடிவங்கள், செயல்படும் தன்மை உள்ளிட்ட விவரங்களையும் கூற வேண்டும். அதுபோல், மொபைல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தன்மை மற்றும் கோபுரத்தைச் சுற்றியுள்ள நிலத்தின் அமைப்பு குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சுதர்சன் கோஷ் கூறினார்.
நன்றி:
தினமலர் (22.06.2011) |