உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் 21.06.2011 அன்று நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில், இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலராக ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் சேவை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் அப்பொறுப்பை ஏற்கிறார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி தலைமையில், இக்ராஃ அலுவலகத்தில், 21.06.2011 அன்று இரவு 07.15 மணிக்கு நடைபெற்றது. ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் முன்னிலை வகித்தார்.
இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட இக்ராஃவின் கல்வி தொடர்பான செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
பின்னர், வரும் 24.06.2011 அன்று மாலையில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் சார்பில் நடத்தப்படவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” பரிசளிப்பு நிகழ்ச்சி, மறுநாள் 25.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள, “மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல்” நிகழ்ச்சி, அன்று மாலையில் கத்தர் காயல் நல மன்றம் நடத்தவுள்ள - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா நிகழ்ச்சி உள்ளிட்டவை குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டது. இவை குறித்த விவரங்களை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் கூட்டத்தில் விவரித்தார்.
அத்துடன், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், சலுகைக் கட்டண அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள English Communication Skill Course குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து, நகரின் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசித்து செயல்திட்டம் வகுப்பதெனவும், அதற்கு முன்பாக, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களுக்கும், மாணவ-மாணவியருக்கும் இதுகுறித்து அறிவிப்புச் செய்வதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம்:
இக்ராஃவின் நிர்வாகப் பணிகளில் முக்கியப் பணியான மக்கள் தொடர்புப் பணியை செவ்வனே செய்திடும் பொருட்டு, செயற்குழு உறுப்பினர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் அவர்களை சேவை அடிப்படையில் இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சில சொந்தப் பொறுப்புகளை நிறைவேற்றி முடித்த பின்னர், வரும் ஜூலை மாத இறுதியில் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் தெரிவித்தார்.
இறுதியாக, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, செயற்குழு உறுப்பினர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் துஆவுடன், இரவு 09.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |