"ஹலோ சார்...! மனதை மயக்கும் மைனா படத்தின் தித்திப்பான பாடல்களை காலர் டியூனா வச்சுக்கணுமா சார்... யோசிக்காதீங்க... உடனே, ஒரு எஸ்.எம்.எஸ்., பண்ணுங்க... ஜமாய்ங்க... இதுக்கு ஒரு பைசா கூட கட்டணம் கிடையாது' என, குலுங்கி குலுங்கி சிரிக்கும் இளம் பெண்களின் குரல் கேட்டு, காலர் டியூனில் ஆரம்பித்து, இத்யாதி, இத்யாதி செய்திகளை எல்லாம் அனுமதி இல்லாமலே அனுப்பி, வாடிக்கையாளர்களை மொட்டையடிப்பதில் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. "ரீசார்ஜ்' செய்யும் பணமெல்லாம் மாயமாய் மறையும் வித்தையைக் கண்டு, வாடிக்கையாளர்கள், "லபோ, திபோ' என புலம்பி வருகின்றனர்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதைவிட, மதிப்புகூட்டு சேவைகளை வலிய தந்து, பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளன. இச்சேவையின் மூலம், "பிரீபெய்டு' வாடிக்கையாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
"காலர் டியூன்', உடல்நல குறிப்புகள், கிரிக்கெட், புதிய திரைப்படங்கள் பற்றிய செய்திகள், திரை நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் போன்ற மதிப்புகூட்டு சேவைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் பெறாமலேயே வழங்கப்படுகின்றன. இந்த புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட மொபைல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் புகார் மையங்களில் முறையான பதில் அளிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், ஒரு தனியார் மொபைல்போன் சேவை நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு, "காலர் டியூன்' சேவையை, ஒரு மாதம் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த இலவச சேவையால், அந்நிறுவன வாடிக்கையாளர்கள் பலர், சந்தோஷம் அடைவதற்கு பதிலாக சந்தேகம் அடைந்துள்ளனர். தங்கள் கணக்கிலிருந்து திடீர் திடீரென பணம் குறைவதாக, "பிரீபெய்டு' வாடிக்கையாளர்களின் புலம்பலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் மீது இப்புகார் அதிகளவு கூறப்படுகிறது.
இது குறித்து, தி.நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறும்போது, "கடந்த இரண்டாண்டுக்கு மேலாக, பிரபல தனியார் மொபைல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளேன். எனக்கு, சமீபத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், ஒரு மாதத்திற்கு இலவசமாக, "காலர் டியூன்' வசதி தரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழித்து, "காலர் டியூன்' வசதியை ரத்து செய்யாமல் உள்ளனர். பணம் பறிப்பதற்காக, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது' என்றார்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத இல்லத்தரசி கூறும்போது, "பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனத்தின், "பிரீபெய்டு' வாடிக்கையாளரான நான், சமீபத்தில் 55 ரூபாய்க்கு, "ரீசார்ஜ்' செய்தேன். 46 ரூபாய்க்கு பதிலாக, 30 ரூபாய்க்கு தான், "டாக்-டைம்' தரப்பட்டது. மேலும், ஏற்கனவே இருந்த 11 ரூபாயும், கணக்கிலிருந்து கழிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக யாரிடம் புகார் தருவதென தெரியவில்லை' என்றார்.
மொபைல்போன் சேவை நிறுவனங்களின் இந்த பகல் கொள்ளையிலிருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற, மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றும் வசதியை அளிக்கும் எம்.என்.பி.,(Mobile Number Portability) திட்டம், முறையாக செயல்படுத்தப்பட, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி:
தினமலர் (19.06.2011) |