உள்ளாட்சி தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக உளவுத்துறை கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.
இன்னும் சில மாதத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடக்க உள்ளது. தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்வு செய்யும் முறையை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக மக்களிடம் உளவுப்பிரிவு போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.
கவுன்சிலர்களால் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது, கவுன்சிலர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தலைவர்கள் செயல்பட வேண்டி உள்ளது. மாறாக, நடுநிலையுடன் செயல்படும் தலைவர்களை கூட கவுன்சிலர்கள் பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுகின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுகிறது.
தற்போதைய நடைமுறையில் தலைவராக இருப்பவர்கள் தங்களது வார்டுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இதனால், மற்ற வார்டுகளில் வளர்ச்சி பணிகள் போதிய அளவு கிடைப்பதில்லை.
இந்த சிக்கலை தவிர்க்க தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். பாரபட்சம் இன்றி வளர்ச்சி பணிகள் நடக்க அனைத்து பகுதி மக்களும் தலைவருக்கு ஓட்டளிக்க வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உளவுப்பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
நன்றி:
தினமலர் (18.06.2011) |