காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில், இயற்கைப் பேரிடரைச் சந்திக்க வாய்ப்புள்ள மக்களுக்கு மாற்றிடத்தில் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கும் VRCC திட்டத்தின் கீழ் 169 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்புதலளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளும் துவங்கின.
இந்நிலையில், தொகுப்பு வீடுகள் கட்டப்படும் காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தைச் சார்ந்த அப்பகுதி, CRZ எல்லை வரையறைக்குள் வருவதாகவும், எனவே அப்பகுதியில் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறும் கோரி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொகுப்பு வீடுகள் கட்டப்படும் அவ்விடம் CRZ எல்லை வரையறைக்குள் வருகிறதா என்பதை District Coastal Zone Management Authority (DCZMA) உடன் இணைந்து அளந்து பார்த்து, 2011 மார்ச் 04ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தங்கவேல் ராஜேஷ் கமிஷனுக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடையும் விதித்தது.
அதன் தொடர்ச்சியாக, 16.06.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெறுமிடத்தை கடல் மட்டத்திலிருந்து அளந்தறியும் பொருட்டு கமிஷனர் தங்கவேல் ராஜேஷ், வழக்குறைஞர்கள் சுவாமி அய்யா, அரசு வழக்குறைஞர் சாமுவேல் ராஜேந்திரன் ஆகியோர் கட்டுமானப் பகுதிக்கு வந்து அளந்து பார்த்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் மேல் இடைவெளி இருக்க வேண்டும் சட்டம் இருக்க, இந்த அளவீட்டின் படி இக்குடியிருப்புக்கும், கடல் மட்டத்திற்கும் இடையில் 140 மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்ததாகத் தெரிகிறது.
District Coastal Zone Management Authority (DCZMA) உடன் இணைந்து தங்கவேல் ராஜேஷ் கமிஷன் அவ்விடத்தை அளவிட்டறிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததன் பேரில், DCZMA குழுவினர் அளவீட்டிற்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகவும், இருந்தும் அவர்கள் இந்த அளவீட்டின்போது வராததால், அவர்களையும் வரவழைத்து மீண்டும் அளக்க வேண்டியிருக்கும் என்றும் தங்கவேல் ராஜேஷ் கமிஷன் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்த அளவீட்டின்போது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், ஹாஜி எம்.ஏ.ஜரூக், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்க செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத், அவ்லியா அப்துர்ரஷீத், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கடந்த 04.03.2011 அன்று காயல்பட்டினத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சர்ச்சைக்குரிய இப்பகுதியை கடல் மட்டத்திலிருந்து அளந்து பார்த்தபோதும், குடியிருப்பு கட்டுமானப் பணிகள், CRZ விதிகளின்படி தடைசெய்யப்பட்ட எல்லைக்குள் அமைந்திருந்தது கண்டறியப்பட்டது. |