| |
செய்தி எண் (ID #) 6516 | | | சனி, ஜுன் 18, 2011 | தூத்துக்குடி மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் அளவு திடீர் குறைப்பு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2296 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தூத்துக்குடி மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் இருந்தும் போலியாக மண்ணெண்ணெய் பெறுவதை கண்டறிய சோதனை நடந்து வரும் நிலையில் குற்றப்புலனாய்வு போலீஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளத்தனமாக ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 23 பேரல் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த போது போலீசார் அதனை மடக்கி அரசு குடோனில் ஒப்படைத்தனர்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை தற்போது குறைத்துள்ளது. இதன் காரணமாக மண்ணெண்ணெய் பெறக் கூடிய ரேஷன் கார்டுகளுக்கு முழுமையாக மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இதுபோன்ற நிலை உருவாகியுள்ளதால் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கார்டில் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லை என்று போலியாக தெரிவித்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல லட்சம் ரேஷன்கார்டுகள் இதுபோன்று இருந்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான கார்டுகள் இதுபோன்று உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு காஸ் இணைப்பு நிறுவனம் மூலமாக இவ்வளவு ரேஷன் கார்டுதாரர்கள் காஸ் இணைப்பு பெற்றிருப்பதாக கணக்கு கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டிய உண்மையான கார்டுதாரர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அனுமதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் அளவு குறைந்ததை தொடர்ந்து இரண்டு காஸ் சிலிண்டர் இருந்தும் மண்ணெண்ணெய் பெற்று வரும் கார்டுகளை கண்டறிய முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் நேரடி மேற்பார்வையில் மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழவினர் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.
மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் தாலுகா விட்டு தாலுகாவில் பணியாற்றும் ஊழியர்களை நியமனம் செய்து அவர்கள் மண்ணெண்ணெய் வாங்க வரும் ரேஷன் கார்டுகளை முழுமையாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காஸ் இணைப்பு ஏஜென்சிகளிடம் இருந்து இணைப்பு உள்ள லிஸ்ட் விபரம் முழுமையாக பெறப்பட்டுள்ளது. இந்த லிஸ்டை வைத்து கொண்டு மண்ணெண்ணெய் வாங்க வரும் ரேஷன் கார்டுகளில் காஸ் இணைப்பு இருந்தால் கார்டில் சீல் அடிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்தனர். காஸ் இணைப்பு இருந்து சீல் அடிக்கப்படவில்லை என்றால் உடனடியாக காஸ் இணைப்பு உள்ளது என்கிற சீல் அடிக்கப்பட்டு, இனி மண்ணெண்ணெய் உங்கள் கார்டிற்கு கிடையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இது போன்று தொடர்ந்து கார்டுகள் சோதனையில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது.
புதியதாக ரேஷன் கார்டுகள் வாங்குபவர்கள் கார்டு வாங்குவதற்கு முன்பாக ரேஷன் கார்டு இல்லை என்று கூறி தாசில்தாரிடம் சான்று பெற்று அந்த சான்றை வைத்து காஸ் இணைப்பை பெற்று விடுகின்றனர். பின்னர் அவர்களுக்கு ரேஷன் கார்டு வருகிறது. அந்த கார்டில் சிலிண்டர் இல்லை என்கிற தகவல் வருகிறது. அதனை வைத்து பத்து லிட்டர் மண்ணெண்ணெய் அந்த கார்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. அதனை வைத்துக்கொண்டு தொடர்ந்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர் என்கிற விபரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டிருப்பதால்தான் சோதனை செய்து இதனை கண்டிப்பாக பிடித்து வருகிறோம். சிலிண்டர் உள்ளவர்கள் தாமாக முன்வந்து தங்கள் வீட்டில் காஸ் இணைப்பு இருக்கிறது என்று ரேஷன்கார்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இது சம்பந்தமான சோதனை நடத்தியும், காஸ் ஏஜென்சீயில் உள்ள பட்டியலை வைத்தும் சரிபார்த்து விடுவோம். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது சம்பந்தமான பிரச்னைதான் தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறையில் (காயல்பட்டினம் கடையக்குடியில்) ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை போலீசுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன், ஏட்டு பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் 23 பேரல்களில் ரேஷன் மண்ணெண்ணெய் வைத்திருந்தார். ரேஷன் கடைகளில் இருந்து வாங்கிய இந்த மண்ணெண்ணெயை மீனவர்கள் படகுகளை இயக்குவதற்கு அதிக விலைக்கு விற்பதற்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலமுருகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 500 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனை தூத்துக்குடியில் உள்ள அரசு மண்ணெண்ணெய் மொத்த கிட்டங்கியில் ஒப்படைத்து விட்டதாக இன்ஸ்பெக்டர் சேகர் தெரிவித்தார்.
ஏற்கனவே மண்ணெண்ணெய் விஷயமாக மண்ணெண்ணெய் பங்குகளுக்கு வரும் ரேஷன்கார்டுகள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடத்தல் மண்ணெண்ணெய் பிடிபட்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 63 ஆயிரத்து 96 ரேஷன்கார்டுகள் இருக்கிறது.
இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 265 ரேஷன் கார்டுகளுக்கு காஸ் இணைப்பு இல்லை என்று கணக்கு உள்ளது.
ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 180 கார்டுகளுக்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளது. 66 ஆயிரத்து 651 கார்டுகளுக்கு இரண்டு காஸ் சிலிண்டர் இருப்பதாக கணக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் எத்தனை கார்டுகள் சிலிண்டர் இருந்தும் இல்லை என்று கூறி போலியாக மண்ணெண்ணெய் வாங்கி வருவது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் முழு விபரம் தெரியவரும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நன்றி:
தினமலர் (17.06.2011) |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|