எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) காயல்பட்டினம் கிளை சார்பில், அதற்காதரவான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதென அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை கூட்டம் 16.06.2011 வியாழக்கிழமையன்று (நேற்று) இரவு 08.30 மணிக்கு, தமுமுக/மமக காயல்பட்டினம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர கிளையின் துணைச் செயலாளர் வாவு புகாரீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமுமுக மற்றும் மமக நகர நிர்வாகிகளான ஜாஹிர் ஹுஸைன், ஐதுரூஸ், தமீமுல் அன்ஸாரீ, ஃபிர்தவ்ஸ், முஜீப், ஹஸன், இப்றாஹீம், அப்துல் காதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் கிளை சார்பில், நகரில் அதற்காதரவான வார்டுகளில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமது வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மனிதநேய மக்கள் கட்சியை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொருட்டு, அதன் சமுதாய இயக்கமான தமுமுக செய்து வரும் மக்கள் நலப்பணிகளை காயல்பட்டினத்தில் பரவலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. |