கடந்த கல்வியாண்டில், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வியடையச் செய்துள்ளனரா என்பதைப் பற்றி, மாவட்டந்தோறும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.
கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை, "பெயில்' ஆக்கக்கூடாது. இந்த விதிமுறைகள், பல தனியார் பள்ளிகளில் மீறப்பட்டு வருவதால், அதிரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறு வயது முதல், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் தரமான, இலவசமான கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்து, "இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை,' 2009இல் மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், 2010 ஏப்ரல் 01ஆம் தேதியிலிருந்து, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன:-
***ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வியுறச் செய்வதால், மன ரீதியாக அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பதை கண்டறிந்து, இந்த வகுப்பு மாணவர்களை, எக்காரணம் கொண்டும் தேர்வில் தோல்வியுறச் செய்யக்கூடாது என்றும், எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும், "பாஸ்' செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
***இரண்டாவதாக, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கையின்போது, மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீத இடங்களை, பள்ளியின் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கி, தொடக்க கல்வி வரை, முற்றிலும் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
***மூன்றாவதாக, மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்றும், சேர்க்கைக்கான காரணிகளில், பெற்றோரின் கல்வி குறித்து, எத்தகைய விசாரணையும் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று அம்சங்களையும், தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இரண்டாம் வகுப்பு குழந்தைகள் என்று கூட பார்க்காமல், அவர்கள் முழு ஆண்டுத் தேர்வில், போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி, "பெயில்' ஆக்குகின்றனர். சட்டத்தை சுட்டிக்காட்டி பேசினால், "டிசி' வாங்கிக் கொள்ளுங்கள்' என, பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.
இதனால், சரியாக படிக்காத மாணவர்களை, "பெயில்' செய்வதும், மாணவர் சேர்க்கையின்போது நுழைவுத்தேர்வு நடத்துவதும், 25 சதவீத இடங்களை, ஏழை-எளிய குழந்தைகளுக்கு வழங்காமல், புறக்கணிப்பு செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது, கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மிக நன்றாகவே தெரியும். ஆனாலும், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். முந்தைய அரசும், இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.
தற்போது, இந்த விவகாரங்கள் குறித்து, தனியார் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகளிலும், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும், முழுமையான அளவில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவ, மாணவியரின் தேர்ச்சி பதிவேடுகளை, முழுமையாக ஆய்வு செய்து, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, "பெயில்' செய்துள்ளனரா என்பது உட்பட, கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்படுகிறதா அல்லது மீறப்படுகிறதா என்பதைப் பற்றி ஆய்வு செய்ய, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் தரும் அறிக்கையின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (17.06.2011) |