காயல்பட்டினம் நகராட்சிமன்ற ஆணையாளரிடம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தே.மு.தி.க.) கட்சி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நகர்நலக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 15.05.2011 அன்று (நேற்று) காலை 12.00 மணியளவில், தே.மு.தி.க. நகர செயலாளர் எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ் தலைமையில், அக்கட்சியின் நகர துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன், சித்தீக் ஹஸன், ஆறாவது வார்டு செயலாளர் அய்யூப் ஆகியோர் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்தில், நகராட்சி ஆணையாளர் வெ.கண்ணையாவை சந்தித்தனர்.
காயல்பட்டினம் தீவுத்தெரு, கொச்சியார் தெரு, கீழ நெய்னார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் - சுகாதாரக் கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் இருக்கும் குடிநீர் வினியோகத் திறப்புத் தொட்டிகளை மூடல்...
கூலக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றல்...
நகரில் இரண்டு நாட்களுக்கொருமுறை சீரான குடிநீர் வினியோகம் செய்தல்...
புதிய சாலை அமைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகளில் உடனடியாக புதிய சாலைகள் அமைத்தல்...
கடற்கரையில் இரு சக்கர வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிடல்...
உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் அப்போது நகர்மன்ற ஆணையாளரிடம் முன்வைத்தனர்.
அவற்றைக் கேட்டறிந்த ஆணையாளர் வெ.கண்ணையா, திறந்த நிலையில் கிடக்கும் குடிநீர் வினியோக திறப்புக்குழாய் தொட்டிகளை போர்க்கால அடிப்படையில் ஓரிரு தினங்களில் பாதுகாப்பாக அமைத்திட ஆவன செய்யப்படும் என்றும், இதர கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், எம்.இ.எல்.முஹ்யித்தீன், உ.ம.ஷாஹுல் ஹமீத், ஏ.ஷம்சுத்தீன், வளர்பிறை முஹம்மத் முஹ்யித்தீன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் ஆகியோர் உடனிருந்தனர். |