சமச்சீர் கல்வி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தீவிர ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு வழங்குவது குறித்தும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடுத்த கட்ட நிலை பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல் செய்வது பற்றி தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
முதல்வர் ஆலோசனை: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குநர் வசுந்தராதேவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கிட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள குழுவினை விரைந்து அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் செம்மொழி மாநாடு குறித்தோ, அதுபற்றிய இலட்சினைகள் இருந்தாலோ அதை தாள்கள் ஒட்டி மறைத்த பிறகு பாடங்கள் நடத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
நிபுணர் குழு பணிகள்: 1 மற்றும் 6ஆம் வகுப்புகளைத் தவிர்த்து மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் குறித்தும், உடனடியாக குழு தனது ஆய்வுப் பணிகளை தொடங்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர் குழு தனது ஆய்வு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களே கால அவகாசம் இருப்பதால் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம், தலைமைச் செயலாளர் சாரங்கி உள்ளிட்டோர் இந்தப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தனர்.
நன்றி:
தினமணி (16.06.2011) |