தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் அரசுத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் தேர்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆட்சியர் முனைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் போன்று புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணையவிருக்கும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து மாநகராட்சி வார்டுகள் அமைக்கும் பணியை விரைவாக முடித்திட தூத்துக்குடி மாநராட்சி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இப்பணிக்கு உறுதுணையாக செயல்பட தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஊரக கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டுகளை ஓர் உறுப்பினர் வார்டாக மாற்றும் பணியினை 15.07.2011 தேதிக்குள் முடித்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்குப் பெட்டிகள் பயன்படுத்த வேண்டியதன் பொருட்டு மாவட்ட தேர்தல் பிரிவில் இருப்பில் உள்ள வாக்குப் பெட்டிகளை பராமரிப்பு செய்து தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓர் உறுப்பினர் அடிப்படையில் நடைபெறவிருப்பதால், தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் நிர்ணயம் செய்தல் ஆகிய பணிகளை விரைந்து முடித்திட அறிவுரை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் திருப்திகரமாக உள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சி.க.வீரனன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ரா.லோகநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) வெ.நளினி ஜெயந்தி, திருநெல்வேலி பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) எம்.ஜோதிமுருகன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் ஆ.பழனி, கோவில்பட்டி, காயல்பட்டினம் நகராட்சிகளின் ஆணையாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். |