வேலூர் அருகே "ஏசி' "வால்வோ' பஸ் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 21 பேர் கருகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து துறை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சென்னையில் இருந்து திருப்பூருக்கு, கடந்த 07ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பஸ் 22 பயணிகளுடன் சென்றது. அதிவிரைவாகச் சென்ற ஆம்னி பஸ், வேலூர் மாவட்டம் அவலூர்பேட்டை அருகே சென்றபோது, விபத்துக்குள்ளாகி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. சாலையில் உராய்ந்தபடியே சென்றதால், பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது.படுக்கை வசதி கொண்ட இந்த வால்வோ பஸ்சில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்ததால், அதிர்ஷ்டவசமாக ஒரு பயணியும், பஸ் டிரைவர் விபத்து நடந்ததும் தப்பியதால், இருவரும் உயிர் தப்பினர்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தையடுத்து, ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
***விமானங்களில் பயணிப்பவர்களுக்கு, எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தால் எப்படி செயல்படுவது, உயிர் தப்பிப்பது எப்படி என்பது குறித்து விவரிப்பது போல், ஆம்னி பஸ்களிலும் கூற வேண்டும். பஸ் புறப்படுவதற்கு முன், பஸ்சின் எந்தெந்த பகுதியில், "எமர்ஜென்சி' ஜன்னல் உள்ளது, அதற்கு அருகில் கண்ணாடியை உடைப்பதற்காக வைக்கப்பட்ட சுத்தியலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டிரைவர்கள் விவரிக்க வேண்டும்.
***குறிப்பாக, "ஏசி' பஸ்களில் அனைத்து கண்ணாடிகளும் மூடப்பட்டிருப்பதால், ஆபத்து காலங்களில் கண்ணாடியை உடைக்க, "எமர்ஜென்சி' ஜன்னல் அருகில் கண்டிப்பாக சுத்தியல் வைக்க வேண்டும்.
***மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டிரைவர்களின் உடல் நலன், கண் பார்வை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்ய வேண்டும்.
***அதிவிரைவாகச் செல்லும் டிரைவர்களை கண்காணித்து, அவர்களை எச்சரிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகள் அடங்கிய சுற்றறிக்கை, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் அனுப்பியுள்ளோம். விரைவில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களையும் நேரில் அழைத்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு போக்குவரத்து துறை அதிகாரி கூறினார்.
"பெர்மிட்' ரத்து: தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ்களை இயக்க அனுமதியில்லை. இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களை ஆந்திரா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் இயக்குகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 21 பேரை பலி கொண்ட, படுக்கை வசதியுடன் கூடிய "வால்வோ' ஆம்னி பஸ், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 21 பேரை பலி கொண்ட சொகுசு பஸ், தமிழகத்தில் இயக்குவதற்கான "பெர்மிட்'டை ரத்து செய்துள்ள அதிகாரிகள், பஸ் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தனர்.
நன்றி:
தினமலர் (17.06.2011) |