காயல்பட்டினம் கடையக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2700 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய்யை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காயல்பட்டினம் கடையக்குடியில் (கொம்புத்துறை) ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி குடிமை பொருள் வழஙகல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் சேகர், துணை ஆய்வாளர் தில்லை நாகராஜன், ஏட்டு பழனிக்குமார் ஆகியோர் நேற்று மாலை காயல்பட்டினம் கடையக்குடி மீனவர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு குடோனில் 23 பேரல்களில் 2700 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ரேஷன் மண்ணெண்ணெய்யை பதுக்கி, கள்ளச் சந்தையில் மீனவர்களுக்கு கூடுதல் விலையில் விற்பதற்காக வைக்கப்பட்டிருப்பது காவலர்களின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
இந்த ரேஷன் மண்ணெண்ணெய் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 23 பேரல் மண்ணெண்ணெய் மாவட்ட வழங்கல் துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross