உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நிபுணர்குழுவின் அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்திருத்தினை எதிர்த்து ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 15ம் தேதி விசாரித்த நீதிமன்றம், பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாடநூல்களின் தரம் ஆகியன குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த குழு ஜூலை 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது:
* தலைவர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர்
* உறுப்பினர் - இரு மாநில பிரதிநிதிகள்:
(1) ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(2) திருமதி. விஜயலட்சுமி சீனிவாசன், முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.
* உறுப்பினர் - இரு கல்வியாளர்கள்:
(1) சி.ஜெயதேவ், நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை.
(2). டாக்டர் திருமதி. ஒயி.ஜி.பார்த்தசாரதி, முதல்வர் மற்றும் இயக்குநர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.
* உறுப்பினர் - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இருபிரதிநிதிகள்
(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி, அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுதில்லி.
(2). பேராசிரியர் அனில் சேத்தி, சமூக அறிவியல் துறை, புதுதில்லி.
* உறுப்பினர் - அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
* உறுப்பினர் செயலாளர்- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்.
மேற்கண்ட குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜுலை மாதம் 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தகவல்:
www.chennaionline.com |