மதுரை, நெல்லையில் உருவாகி வரும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அடுத்த மாதம் முதல் செயல்பட துவங்கும்.
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி அருகில் பாரதி உலா ரோட்டில் தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரை கோச்சடை பகுதியில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உருவாகி வரும் 77 மையங்களில் இதுவும் ஒன்று. இதேபோல நெல்லையிலும் புதிய மையம் ஒன்று உருவாகி வருகிறது.
மதுரை பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடைபெறும். இதனால் பணிகள் விரைவாக நடக்க வாய்ப்புள்ளது. போலீசார் ஆவணங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்கிய 3 நாட்களில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கான "கம்ப்யூட்டர் சிஸ்டம்' மற்றும் தொழில்நுட்பங்களை அமைக்க வெளியுறவுத்துறை, டாடா கன்சல்டன்சியுடன் உடன்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மத்திய அரசின் ஆய்வுக்காக காத்திருக்கிறது. முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பித்த பின் இம்மையம் செயல்படத் துவங்கும். சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. கோச்சடை மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், "கேபிள் மற்றும் வயரிங் பணிகள் முடிந்துவிட்டன. இங்குள்ள தொழில்நுட்பத்தை வேறு சம்பந்தமில்லாத நபர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிநவீனமானதாகும்,'' என்றனர்.
நன்றி:
தினமலர் (18.06.2011) |