தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாடப்புத்தகம் வரும் வரை முனைப்பு, இணைப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளரும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தெரிவித்தார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் ஏற்படுத்திய பரபரப்பினால் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் மூன்று வார காலத்திற்கு பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு எந்த பாடத்திட்டம் என்பது தெரியவராததால் புத்தகமும் இல்லாத நிலையில் வகுப்புகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்பு தவிர இரண்டு முதல் 5ஆம் வகுப்பு, 7 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை முனைப்பு, இணைப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து இந்த பயிற்சிகள் எல்லா மாவட்டங்களிலும் அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித்துறை உத்தரவுப்படி ஒரு மாத காலத்திற்கு பள்ளிகளில் என்ன வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தெரிவித்து, அவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று பள்ளி திறந்த அன்று இந்த வகையான பயிற்சிகள் பாடப்புத்தகம் இல்லாத வகுப்புகளில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவை எந்த முறையில் நடக்கிறது என்பதை சில பள்ளிகளுக்கு சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளா ஆய்வு செய்தார். பாடப்புத்தகம் வரும் வரை பள்ளியில் நடக்கும் பயிற்சி வகுப்புகள் குறித்து அவர் கூறியதாவது:-
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறமையை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்களின் ஒட்டு மொத்த திறமைகளை வளர்க்கும் வகையில் கற்றல், கற்பித்தல் அமைய ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மாத காலத்திற்கு முனைப்பு, இணைப்பு பயிற்சி (சைல்டு சென்டர்டு இன்டென்சிவ் பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தப்படுகிறது.
மாணவர்கள் பயமின்றி, பதட்டம் இன்றி, தன்னம்பிக்கையுடன் தாம் பெற்ற கல்வி அறிவை நடைமுறை செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு கற்றறியும் வகையில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கலைத்திட்டம் 2005இல் (நேஷனல் குரிகுலம் பிரேம் ஒர்க் 2005) பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையிலும் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும் (ரைட் டூ எஜுகேஷன் ஆக்ட் 2009) இந்த பணியிடை பயிற்சி மிகவும் முக்கியமானதாக கருத்திற்கொண்டு, அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நிலைக்கு ஏற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகளை மாற்றியமைத்து, ஒவ்வொரு மாணவனும் தன்னம்பிக்கையுடனும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் கற்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் அடிப்படையில் இந்த பயிற்சிகாலம் பயன்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை ஒரு மாத காலம் இந்த பயிற்சி நடக்கும். மொழித்திறன் வளர்த்தல், கணித அடிப்படைத் திறன் அறிதல், படைப்பாற்றல் மற்றும் அறிவியல் சிந்தனையை ஊக்குவித்தல், தனி மனித மற்றும் சமுதாய நற்பண்புகளை பெற்று சிறந்த மனிதனாக உருவாதல் ஆகியவை இந்த பயிற்சியினை நோக்கமாக கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
*** தமிழ் பாட வகுப்புகளில் மொழி திறன் வளர்த்தல், இணைப்பு பயிற்சி வழங்குதல், கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், சுய வரலாறு எழுதுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
*** ஆங்கில பாட வகுப்புகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ், சிறு, சிறு உரையாடல், பேசிக் கிராமர், ரீடிங், ரைட்டிங், கட்டுரை, கடிதம் எழுதுதல் போன்ற பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
*** கணித பாட வகுப்புகளில் மணக்கணக்கு போடுதல், வரைபடம் வரைதல், வாய்பாடு பயிற்சி, அடிப்படை கணித விதிகள் போன்ற பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
*** அறிவியல் பாட வகுப்புகளில் செய்முறை பயிற்சி, களப்பணிகள், தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காங்களுக்கு மாணவ, மாணவிகளை நேரடியாக அழைத்து சென்று விளக்குதல், மாணவர் திறன் வளர்த்தல், தாவரங்கள் சேகரித்தல் போன்ற பயிற்சி அளிக்க வேண்டும்.
*** சமூக அறிவியல் பாட வகுப்புகளில் இந்திய வரலாறு பற்றிய விபரம் தெரிவித்தல், பார்லிமெண்ட் செயல்பாடு, அரசியல் அமைப்பு விதிகள் எடுத்துரைத்தல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மேப்களை காண்பித்து விளக்குதல், இந்திய தலைவர்கள் பற்றிய விபரத்தை தெரிவித்தல், புவியியல் களப்பணி செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளா தெரிவித்தார். இது தவிர இணை செயல்பாடுகளாக சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, செஞ்சுருள் சங்கம், இலக்கியமன்றம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை போன்றவை பற்றி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து இணை செயல்பாடுகளையும் இந்த பயிற்சி காலத்தில் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் (16.06.2011) |