தமிழகத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சட்ட திருத்தத்தையும் மாநில அரசு மேற்கொண்டது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறையை தொடர வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பிற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களை 9 பேர் கொண்ட நிபுணர் குழு மூலம் ஆராய்ந்து முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது.அந்தக் குழு தற்போது பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களின் தரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், பிரின்ஸ் கஜேந்திர பாபு, மனோன்மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தனித்தனி பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மனுக்களில் கூறியுள்ளதாவது: சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 957 பள்ளிகளில் பயிலும் 1 கோடியே 35 லட்சம் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே அரசின் உண்மையான நோக்கம் ஆகும். சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் ஆய்வு செய்து, அவற்றில் உள்ள குறைகளை நீக்கி, தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளைதான் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கல்வி ஆலோசனை கவுன்சில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பல அம்சங்களும், உயர் நீதிமன்றத்தின் பல வழிகாட்டுதல்களும் பின்பற்றாத நிலையில், சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறைகளெல்லாம் சரி செய்யப்பட வேண்டும்.
மேலும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு உள்பட தேசிய அளவில் நடைபெறும் ஏராளமான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெறும் வகையில், மாநில பள்ளி வாரியத்தின் பாடத் திட்டம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்று அந்த பதில் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
நன்றி:
தினமணி (29.06.2011) |