காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லியும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலரும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினரும், எஸ்.ஜே.எம். மெடிக்கல்ஸ் அதிபருமான ஹாஜி பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி நேற்று (27.06.2011) மாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 09.00 மணிக்கு, காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி மையவாடியில் நடைபெற்றது. பின்னர் காலை 10.00 மணியளவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம், பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் காழி அலாவுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், மறைந்த மர்ஹூம் பி.எஸ்.ஏ.ஷாஃபீ ஹாஜி அவர்கள் நிர்வாகியாகப் பணியாற்றிய நிறுவனங்களின் சார்பில் அதன் அங்கத்தினர் இரங்கல் உரையாற்றினர். துவக்கமாக, மர்ஹூம் அவர்கள் செயலாளராகப் பணியாற்றிய மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ உரையாற்றினார். அவர் தனதுரையில்,
எந்தப் பணியையும் நினைத்தவுடன் சிரமேற்காமல், நன்கு யோசித்து பொறுப்பெடுப்பவர் அவர் ஷாஃபீ ஹாஜியார்... எடுத்த காரியத்தை தரமாகச் செய்து முடிப்பவர்... அதற்கு சான்றுதான் இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த அஹ்மத் நெய்னார் பள்ளி கட்டிடம்... இதன் கட்டிடப் பணிகளில் அவர் 99 சதவிகிதம் ஈடுபாடு காட்டினார்...
பொதுவாழ்வில் நாமறிய எந்தக் குறையும் வைக்காத காரணத்தால், அவரது சொந்த வாழ்க்கையில் மட்டும் சில குறைகளை சரிசெய்ய முடியாமல் போனது... வல்ல அல்லாஹ் அவற்றை நிறைவாக்கித் தருவானாக... என்றார்.
பின்னர், மர்ஹூம் அவர்கள் பொருளாளராகப் பணியாற்றிய காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் உரையாற்றினார். அவர் தனதுரையில்,
காயல்பட்டினம் நகரின் ஏழை-எளியவர்கள் பல்வேறு சுயதேவைகள் காரணமாக வட்டியின் பக்கம் கூட்டங்கூட்டமாகச் சென்றதைக் கண்டு கவலையுற்று நமதூரில் சில பைத்துல்மால் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையை நிறுவியவர்களுள், மர்ஹூம் ஷாஃபீ ஹாஜி அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்...
“இந்த பைத்துல்மாலின் பொருளாளராக நீங்கள்தான் இருக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அப்பொறுப்பை தன்னிறைவுடன் செய்து முடித்துள்ளார்... பொதுவாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர், அண்மைக்காலமாக நோயுற்றிருந்த நிலையிலும் எங்களைச் சந்திக்கும்போதெல்லாம் பைத்துல்மால் நடவடிக்கைகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிவார்... என்றார்.
அடுத்து, மர்ஹூம் அவர்கள் முத்தவல்லியாகப் பணியாற்றிய அஹ்மத் நெய்னார் பள்ளியின் சார்பில், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் உரையாற்றினார். அவர் தனதுரையில்,
சுமார் 22 ஆண்டுகள் இப்பள்ளியின் முத்தவல்லியாக சிறந்த முறையில் பணியாற்றியவர் பெருந்தகை ஷாஃபீ ஹாஜியார் அவர்கள்...
இப்பள்ளி கட்டிடப் பணிக்கு துவக்கத்தில் ரூபாய் 30 லட்சம்தான் செலவு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பணி முடிவுறும் நிலையில் அதன் செலவு ரூபாய் 60 லட்சத்தைத் தொட்டது. அனைவரும் மனச்சோர்வுக்கு ஆளாக நேரிய தருணத்தில், மிகுந்த தன்னம்பிக்கையுடன் அனைத்துக் காரியங்களையும் நிறைவாக செய்து முடித்து, பள்ளியின் இதர நிர்வாகிகளின் மனச்சோர்வைப் போக்கி, இன்று இந்தளவு பள்ளி பிரம்மாண்டமாக உருவாவதற்கு தன்னலம் பாராமல் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்...
இத்தனை சிறப்பாக பணியாற்றிய அவர்கள் புதுப்பிக்கப்பட்ட இப்பள்ளியின் துவக்க விழாவில் பங்கேற்க வாய்ப்பின்றி போனதை நினைத்தால் நாமெல்லாம் நஸீப் – பாக்கியமற்றவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
எந்தச் சூழலிலும், இந்த பள்ளியின் மஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கு முக்கியத்துவமளித்து, கட்டிக்காத்தவர்கள் மர்ஹூம் ஷாஃபீ ஹாஜியார் அவர்கள். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஜமாஅத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்... என்றார்.
இறுதியாக, பள்ளியின் இமாம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ துஆவுடன் இரங்கல் கூட்டம் நிறைவுற்றது.
ஜனாஸா நல்லடக்கம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
|