சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 42ஆவது பொதுக்குழுக் கூட்டம் 12.08.2011 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலர் முஹம்மத் நூஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 42ஆவது பொதுக்குழுக் கூட்டம், 12.08.2011 வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணியளவில், ரியாத் ஹால்ஃப்மூன் பார்ட்டி ஹாலில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. கூட்டம் துவங்குதவற்கு முன்னரே அரங்கில் அனைவரும் சங்கமித்திருந்தனர்.
கூட்ட நிகழ்வுகள்:
துவக்கமாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மன்றத் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் பி.எஸ்.ஜே.ஜெய்னுல் ஆபிதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எம்.பி.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ‘இன்னிசைத் தென்றல்‘ எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் இறைவாழ்த்துப் பாடல் பாடினார்.
தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து தலைவர் முன்னுரை வழங்கினார். மன்றத்தில் புதிதாக உறுப்பினராக இணைந்துள்ளவர்களை வரவேற்ற அவர், உறுப்பினர்கள் தமது மாத சந்தா தொகைகளை நிலுவையின்றி உடனுக்குடன் செலுத்துவதன் மூலம், பல்வேறு தேவைகளுக்காக உதவி கோரி காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய மக்களிடமிருந்து மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அவ்வப்போது தயக்கமின்றி உதவ முடியும் என்று தெரிவித்தார்.
செயற்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு:
உறுப்பினர் மாதச் சந்தா பெருந்தொகையாக நிலுவையில் இருந்து வருகிறபோதிலும், பெறப்படும் விண்ணப்பங்களின் அவசர அவசியத்தை உணர்ந்தவர்களாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக நிதியுதவி செய்வதை தான் மனதாரப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இதுகாலம் வரை ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகத்தில் அங்கம் வகித்து, அண்மையில் விடைபெற்று, மூன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றுவதற்காக சென்னையில் இடமாற்றம் கண்டிருக்கும் ‘முத்துச்சுடர்‘ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்வின் கடந்தகால சேவைகளை அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு:
அதேபோன்று, மன்றத்தின் உறுப்பினர் சந்தா தொகைகளை உற்சாகத்துடன் வசூலித்தல் மற்றும் இந்த பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்த முஹ்ஸின், ஸூஃபீ இப்றாஹீம், ஹஸன், ஸாலிஹ், ஹாஜி, ஃபாஸீ உள்ளிட்ட செயல் வீரர்களின் சீரியை பணியைப் பாராட்டி, இதுபோன்று இதர உறுப்பினர்களும் - குறிப்பாக இளைஞர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு, நம் நகரின் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் இம்மன்றத்தின் மூலம் அயராமல் நகர்நலப் பணிகளாற்றி வரும் செயற்குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள நண்பாகள் அனைவரையும் அவர் தனதுரையில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
மன்றத்தின் பெயர் மாற்றம்:
அடுத்து, ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் உரையாற்றினார். ‘ரியாத் காஹிர் பைத்துல்மால்‘ என்றிருந்த மன்றத்தின் பெயர் ‘ரியாத் காயல் நற்பணி மன்றம்‘ என்று மாற்றம் செய்யப்பட்டதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
கேன்சர் சர்வே குறித்து விளக்கம்:
பின்னர், காயல்பட்டினம் நகரில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரவல் கணக்கெடுப்பு - கேன்சர் சர்வே குறித்து, மன்றத்தின் ஆலோசகரும், செயல் வீரருமான ஹாஜி கூஸ் அபூபக்கர் மடிக்கணினி உதவி கொண்டு, அசைபட விளக்கத்துடன் உரையாற்றினார்.
உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை இறையருளால் நமதூரை விட்டும் முற்றிலுமாக ஒழித்திட நம் மன்றம் இதர மன்றங்களுடன் இணைந்து தயங்காமல் செயலாற்றும் என்று தெரிவித்த அவர், புற்றுநோய் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை தொடராக மேற்கொண்டு வரும் காயல் நல மன்றங்களையும் தனதுரையில் பாராட்டிப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
அதனைத் தொடர்ந்து, ‘தர்மத்தின் சிறப்பு‘ என்ற தலைப்பில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ரியாத் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் பணியாற்றி வரும் சமூக சிந்தனையாளர் டாக்டர் கலீலுர்ரஹ்மான் உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகரத்து மக்கள் எங்கிருந்தாலும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து, தம் ஊரின் மீது கொண்டுள்ள வற்றாத பாசம் காரணமாக தம்மால் இயன்ற உதவிகளை நகர்நலப் பணிகளுக்காக இதுபோன்ற மன்றங்களை அமைதது செயல்படுத்தி வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக பெரிதும் பாராட்டிப் பேசினார்.
நாம் செய்யும் தானதர்மங்கள்தான் நம்மை ஈருலகிலும் ஈடேற்றம் பெறச் செய்யும் என அரிய பல விளக்கங்களுடன் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
குலுக்கல் முறையில் பரிசுகள்:
பின்னர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களிலிருந்து பத்து பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கண்கவர் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
நிறைவாக, ஹாஜி நன்றி கூற, ஹாஃபிழ் ஜெய்னுல் ஆபிதீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் சுவையான காயல்பட்டினம் கறிகஞ்சி, கடற்பாசி, வடை - பஜ்ஜி வகைகள், குளிர்பானம், தேனீர் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
கூட்ட நிகழ்வுகளிலும், இஃப்தார் நிகழ்ச்சியிலும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் நூஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |