கடந்த 24.08.2011 அன்று காயல்பட்டினத்தில் ‘நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு‘துவக்கப்பட்டுள்ளதை, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘(MEGA) வரவேற்றுள்ளது. இதுகுறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பில் நிறைந்த சமுதாய சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
எதிர்வரும் நகராட்சித் தேர்தல் மூலமாக நல்லதோர் நகர்மன்றம் அமைத்திடும் மகத்தான பணியில்,நகர மக்களுக்கு வழிகாட்டும் மாபெரும் மக்கள் இயக்கமாக எந்த செல்வந்தரின் பின்புலமும் இல்லாமல் அல்லாஹ்வை முன்னிறுத்தி MEGA என்னும் தற்காலிக அமைப்பு காயல் உள்ளிட்ட சர்வதேச காயலர்களுடன் ஆதரவுடன் சமீபத்தில் துவங்கப்பட்டது தாங்கள் யாவரும் அறிந்ததே!
இதன் ஆரம்பக்கட்ட பணிகளான ஆதரவாளர்களை இணைப்பது, அனைத்து ஜமாஅத் மற்றும் சமூகநல அமைப்புகளின் ஆதரவினையும், அயல் மற்றும் உள்நாட்டு காயல் நல மன்றங்களின் தார்மீக ஆதரவினையும் பெற்று, ஜமாஅத்கள் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் அனைத்தும் செயலாக்கத்தில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் காயல் மற்றும் பல்வேறு நாடுகளின் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தாய்மண்ணில் துவங்கப்பட்டுள்ள நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை MEGA திறந்த இதயத்துடன் வாழ்த்தி வரவேற்கிறது. புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள குழுவின் செயல்திட்டங்களை - முழுவதுமாக அறிந்த பின் அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் - முழுவதுமாகவும், நிறைவாகவும் வழங்க MEGA தயாராக உள்ளது. அதே நேரத்தில் எந்த இலட்சியத்திற்காக MEGA ஆரம்பிக்கப்பட்டதோ, அதனை அடையும்வரை வலுவோடும், துணிவோடும் - இன்ஷா அல்லாஹ், இறைவனின் உதவிக்கொண்டு - போராடும்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளில் தனவந்தர்களின் போர்வையில் தவறானவர்கள் பலர் ஊடுருவி, நகருக்கு ஏற்பட்ட நாசநிலை மீண்டும் வராமல் தடுக்க MEGA நேர்மை கலந்த உறுதியுடன் பாடுபடும். நல்லதை யார் செய்தாலும் ஆரத்தழுவி ஆதரிக்கும் அதேவேளையில், தவறான எண்ணத்தில் காயை நகர்த்துபவர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், MEGA அவர்களை எதிர்த்து போராடும் . வெகுஜன மக்கள் சக்தியின் துணையுடன் நீதியை நிலைநாட்டும், இன்ஷாஅல்லாஹ்..
இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |