வரும் நகர்மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு - நேற்று (ஆகஸ்ட் 24) - நகரில், காக்கும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கூட்டம்
ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது குறித்து - அதன் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காக்கும் கரங்கள் நற்பணிமன்றத்தின் சார்பாக நமதூர் ஈக்கி அப்பா தைக்கா வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுநல அமைப்புகளின்
கலந்தாலோசனைக் கூட்டம் ஜனாப் ஜரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் துவக்கமாக வாவு எஸ்.ஏ.ஆர். இஸ்ஹாக்
அவர்கள் இறைமறை வசனத்தை ஓதினார்கள். வரவேற்புரை மற்றும் கூட்டம் குறித்த விளக்க உரையை இளைஞர் ஐக்கிய முன்னணியின் ஜனாப்
முஹம்மது முஹைதீன் அவர்கள் விளக்கினார்கள்.
இந்த கூட்டத்தில் பொது நல அமைப்புகளான காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்-அமீன் இளைஞர் நற்பனி மன்றம், இளைஞர் ஐக்கிய
முன்னனி (Y.U.F), ஐக்கிய விளையாட்டுச் சங்கம், காயல் ஸ்போர்டிங் கிளப், ரெட் ஸ்டார் சங்கம், காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT),
I.I.M, சீதக்காதி நகர் நல அறக்கட்டளை, ரஹ்மதுன்லில் ஆலமீன் அமைப்பு, சீதக்காதி நினைவு சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட நகரின் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஜனாப் என்.டி.சலாஹூத்தீன்:- ஏகோபித்த ஆதரவு உள்ள ஒரு
நகர்மன்ற தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் தேர்வில் நல்ல முறையில் கவனம் செலுத்தி எதையும் எதிர்பார்க்காத நபரை
தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் இல்லாத நகராட்சியை உருவாக்குவதில் இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் பங்கு முக்கியமானதாக இருக்க
வேண்டும் என்று கூறினார்கள்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு சார்பாக ஜனாப் கே.எம்.டி.சுலைமான்:-
ஜனாப் என்.டி.சலாஹூத்தீன் அவர்கள் தெரிவித்த கருத்தை ஆதரித்த அவர்கள் சிறப்பான நகர்மன்றத்தை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன்
செயல்பட வேண்டும் என்று கூறினார்கள்.
சமூக ஆர்வலர் ஜனாப் அஹமது ஹூஸைன்:- கடந்தமுறை உறுப்பினரை தேர்வு செய்தது போன்று
இல்லாமல், இந்த நகராட்சி தேர்தலுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் நாம் (நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவும், ஊர் மக்களும்) மிகுந்த
கவனத்துடன் தேர்வு செய்து தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக வழிசெய்திடவேண்டும். அது போன்றே ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
மீண்டும், மீண்டும் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பாக ஜனாப் ஹாரூன்:- ஒருமித்த கருத்துடன் ஜமாஅத் மூலம்
தேர்ந்தெடுப்பவர்களும், தாங்கள் வெற்றிபெற்ற பிறகு பணத்திற்கு ஆசைப்பட்டு சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு
ஜமாஅத் எப்படி பொருப்பாக முடியும்? ஜமாஅத் அவர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நல்லவர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.
காயல்பட்டினம் அறக்கட்டளை சார்பாக ஜனாப் ஆதம் சுல்தான்:- வளமான நகர்மன்றத்தை உருவாக்குவதில்
இந்த குழு உறுதியாக செயல்பட வேண்டும் என்றும், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வு செய்ய வேண்டும்
என்றும் தமது கருத்தை பதிவு செய்தார்கள்.
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஜனாப் மொஹூதும்:- இந்த குழு ஊரின் அனைத்து ஜமாஅத்களையும்
ஒன்றிணைக்க வேண்டும் என்றும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையோடு ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலம் இன்ஷாஅல்லாஹ் நமது
நாட்டம் வெற்றிபெரும் என்றும் தெரிவித்தார்கள்.
ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் ஜனாப் பல்லாக் அப்துல் காதர் நெய்னா:- வார்டு வேட்பாளரை
தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவருக்கு அப்பகுதியில் நல்ல பெயா இருக்கின்றதா என்றும், கவுன்சிலர் பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்றும்
பரிசோதித்து அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிப்பது சிறந்ததாகும் என்று கூறினார்கள்.
இவர்களைப் போன்றே சமூக ஆர்வலர் ஜனாப் சதக்கதுல்லாஹ், ரஹ்மதுன்லில் ஆலமீன் சார்பாக ஜனாப் செய்யது மீரான் ஆகியோரும் தங்களது
கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஜனாப் மரைக்கார்:- இந்த குழு எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருக்க
வேண்டும் என்றும், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.
சீதக்காதி நகர் வார்டில் நம் சமூகத்தை சேர்ந்த 13 பேர் போட்டியிட்டதன் மூலம் கடந்த நகராட்சி தேர்தலில் மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் வெற்றி
பெற்றதாக சீதக்காதிநகர் நல அறக்கட்டளை சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட சகோ. ஜமால் அவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ததோடு,
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற தேர்தலில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மூலம் இதுபோன்ற பல பேர் போட்டியிடுவதை தவிர்க்க முயற்சி எடுக்க
வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
சமூக ஆர்வலர் ஜனாப் வாவு இஸ்ஹாக்:- கடந்த முறை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 18
உறுப்பினர்களுக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று கூறினார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கருத்துக்கள் விவாதித்து முடிவு செய்யப்பட்டது:-
1. அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நமதூர் நகராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக அனைத்து பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக்
கூட்டத்தில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு புதியதாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
2. வரலாற்று சிறப்புமிக்க காயல் மாநகரத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலில் உண்மையான, ஊழலற்ற, உயர்ந்த
மனிதர்களை நகர்மன்ற உறுப்பினர்களாக அனுப்பவும், காயல் நகரில் களப்பணியாற்றவும், புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சி தேர்தல்
ஒருங்கிணைப்பு குழுவிற்கு நமதூரின் அனைத்து ஜமாஅத்களும், அரசியல் அமைப்பின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் முழு
ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
3. உலக காயல் நல மன்றங்களையும், புதியதாக வளைகுட பகுதியில் நகராட்சி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பினர்களிடமும்,
நமதூரில் நடைபெறும் தேர்தலின்போது களப்பணி செய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு தங்களது
கருத்துக்களையும், முழு ஆதரவையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
4. புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக
ஆர்வலர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
6. சாதி, சமய, இன வேறுபாடுகளை கலைந்து, பாரம்பரியமிக்க காயல் மாநகரத்தின் பாதுகாக்கப்பட்டு வரும் கண்ணியத்தை கருத்தில் கொண்டு
வரும் தேர்தலின் போது, பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் போன்ற மோசமான நிகழ்வுகளை தடுத்துநிறுத்தி
உண்மையான முறையில், நேர்மையான, ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற நமது நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முழுமையாக
ஈடுபடுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
7. நகராட்சி தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து பொதுநல அமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமூக
ஆர்வலர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
8. நமதூரில் இரத்ததானம் உட்பட பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் இளைஞர்கள் படையை கொண்ட காக்கும் கரங்கள் அமைப்பின்
சார்பாக, நமது நகராட்சியை சீர்மிகு நகராட்சியாகவும், நேர்மையான நகராட்சியாகவும் உருவாக்கும் எண்ணத்தில், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு
குழு ஏற்படுத்துவதற்காக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த காக்கும் கரங்கள் அமைப்பிற்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் ஜனாப் ஆதம் சுல்தான், ஜனாப் மொஹிதீன் அப்துல் காதர் (YUF), ஜனாப் வாவு இஸ்ஹாக், ஜனாப் என்.டி. சலாஹுத்தீன், ஜனாப் ஹாரூன் ரஷீத், ஜனாப் ஜெய்னுலாப்தீன், ஜனாப் எம். ரஜாக் ஆகியோர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவாக அனைவருக்கும் இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நோன்பு திறப்பதற்காக கஞ்சி, சமூஸா, பருப்பு வடை, உளுந்து
வடை மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.எம். சாஹுல் ஹமீது |