காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று (இன்று) துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
13.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், காரியாப்பட்டி சேது கால்பந்துக் கழக அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதின. ஆட்டம் துவங்கிய 10ஆவது நிமிடத்தில், காரியாப்பட்டி அணி வீரர் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு முதற்பாதி ஆட்டம் முழுக்க மந்த நிலையிலேயே சென்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் சற்று விறுவிறுப்படைந்தது. ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் ஸ்ரீதர் என்ற வீரர் கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில், காரியாப்பட்டி அணியின் ஆல்வின் என்ற வீரர் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன்பிறகு இரு அணியும் கோல் எதுவும் அடிக்காததால், காரியாப்பட்டி சேது கால்பந்துக் கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இன்று மாலையில் நடைபெறவுள்ள போட்டியில் அந்த அணி திருவனந்தபுரத்தைச் சார்ந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியுடன் களம் காணவுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில், காயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அவருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் நடப்பாண்டு சுற்றுப்போட்டிக் குழு தலைவர் உமர் ஒலி சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர், சிறப்பு விருந்தினருக்கு இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நேற்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|