காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
12.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், 10.05.2012 அன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாநகர காவல்படை அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில், இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. முதல் பாதி இறுதி நேரம் வரை எந்த அணியும் கோல் எதுவும் போடவில்லை.
இரண்டாவது பாதியில், 55ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் கவி பாரதி என்ற வீரர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி தனதணியின் கோல் கணக்கைத் துவக்கி வைத்தார். அதன் பிறகு, தூத்துக்குடி அணி தற்காப்பு ஆட்டத்திலேயே முழு கவனத்தையும் செலுத்தியது.
இந்நிலையில், ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் மற்றொரு வீரர் ஜெரால்ட், சற்று தொலைவிலிருந்த நிலையில் அடித்த பந்து, அனைத்து வீரர்களையும் கடந்து அற்புதமாக கோலானது. அதன் பிறகு, ஆட்டம் முடிவடையும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்ட நிறைவில், சென்னை மாநகர காவல் படை அணி, 2-0 என்ற கோல் கணக்கில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியை வென்று, வரும் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்த அணி விளையாட தகுதி பெற்றது.
இப்போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் கால்பந்தாட்ட ரசிகர்கள் திரளாகக் குழுமியிருந்தனர்.
இன்று மாலையில் நடைபெறும் போட்டியில், காரியாப்பட்டி சேது கால்பந்துக் கழக (Sethu Football Club) அணியும், சென்னை வருமான வரித்துறை (Chennai Income Tax) அணியும் களம் காணவுள்ளன. |