காயல்பட்டினம் கோமான் தெருக்களைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இதுநாள் வரை குத்துக்கல் தெருவிலுள்ள நியாய விலைக் கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டிய நிலையிருந்து வந்தது.
நீண்ட தொலைவுக்குச் சென்று பொருட்களை வாங்கிச் சுமந்து வர அப்பகுதி மக்கள் - குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமம் அடைவதாகக் கூறி, கோமான் தெரு வட்டாரத்திலேயே அப்பகுதி மக்களுக்காக தனிக்கடை அமைந்திட ஏற்பாடுகள் செய்து தருமாறு, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர், மாவட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்ட அரசுத் துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
கோமான் ஜமாஅத்திற்குட்பட்ட கடையொன்றை ஜமாஅத் நிர்வாகம் இலவசமாக அளித்ததைத் தொடர்ந்து, அங்கு நியாய விலைக்கடையின் கிளை திறப்பு விழா இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா விழாவிற்குத் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஜஹாங்கீர், இ.எம்.சாமி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, நகரப் பிரமுகர் ஏ.கே.பீர் முஹம்மத் மற்றும் கோமான் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கோமான் நற்பணி மன்ற நிர்வாகி ஹாஜி மலங்கு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, வழங்கல் துறை மண்டல மேலாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் சிறப்புரையாற்றினார். தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகள் எவ்வித சிரமமுமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், கோமான் ஜமாஅத்திற்குட்பட்ட பகுதியில் இப்படியொரு கடை அமைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பாராட்டியதோடு, கடையைத் திறந்து வைப்பதில் தான் பெருமகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 913 நியாய விலைக் கடைகள் உள்ளதாகவும், காயல்பட்டினத்தில் மட்டும் 10 கடைகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர், பணியாளர் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களை வாகனங்களில் அனுப்பி வைத்தல் உள்ளிட்டவற்றில் அரசு நிர்வாகம் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதால், பகுதி நேர கடைகளைப் பிரித்தளிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும், எனினும் கோமான் ஜமாஅத் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இது இருக்கிற காரணத்தாலும், இங்கு கடையமைவதற்கு இப்பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பளித்துள்ளதாலும் இப்பகுதியில் கிளைக் கடை துவக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
காயல்பட்டினத்திற்கென தனியாக மண்ணெண்ணெய் விற்பனைக் கூடம் அமைக்க அரசு ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான 7 சென்ட் நிலத்தை நகர மக்கள் தந்தால் உடனடியாக அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், குடும்ப அட்டையில் பெயர் பதிவு செய்யும் அலுவலர்கள் முஸ்லிம்களின் பெயர்களை எழுத்துப்பிழைகளோடு பதிவு செய்து விடுவதால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்ட தேவைகளுக்காக குடும்ப அட்டையை சான்றாவணமாக அளிக்கும்போது தேவையற்ற அலைச்சல்களும், தாங்கொனா சிரமங்களும் அடைவதாகத் தெரிவித்தார்.
பெயர் பதிவு, திருத்தம் என ஒவ்வொன்றுக்கும் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை அலைந்து திரிய வேண்டிய நிலை காயல்பட்டினம் பொதுமக்களுக்கு - குறிப்பாக பெண்களுக்கு மிகுந்த சிரமத்தையளிப்பதாகத் தெரிவித்த அவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது சிறப்பு முகாம்களை காயல்பட்டினத்திலேயே ஏற்பாடு செய்து இப்பணிகளை முறைப்படுத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையுரையாற்றினார். கோமான் ஜமாஅத் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அப்பகுதியிலேயே நியாய விலைக் கடையின் கிளையை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான், உடனிருந்து ஒத்துழைப்பளித்த கோமான் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டுவதாகத் தெரிவித்த அவர், ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழிருந்து காரியங்களை சாதிப்பதில் கோமான் ஜமாஅத் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகப் பாராட்டிப் பேசினார்.
மேடையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இம்மாதம் 25ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தின் 01, 02ஆம் வார்டுகளைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கான பெயர் சேர்ப்பு - திருத்த முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறும் என மாவட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பகுதி பொதுமக்களின் சிரமங்களைப் போக்கிடும் வகையில் இங்கு கடையமைத்துத் தந்த தமிழக அரசு, அதற்கு ஆவன செய்த மாவட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்த அவர், காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய தேவைப்பட்ட 50 சென்ட் நிலத்தை வழங்கிய கோமான் ஜமாஅத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
பின்னர், மேடையில் வீற்றிருந்த அதிகாரிகள், நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிமுக சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஆகியோருக்கு கோமான் ஜமாஅத் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இறுதியாக, ஹாஜி எல்.எம்.இ.கைலானீ நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் கடையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.
முதல் விற்பனையை வழங்கல் துறை அதிகாரி செல்வ பிரசாத் துவக்கி வைத்தார். இரண்டாவது விற்பனையை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவும் துவக்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியின் சிறப்பழைப்பாளர்கள் அனைவருக்கும் கோமான் ஜமாஅத் மற்றும் கோமான் நற்பணி மன்றம் சார்பில் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
|