காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று (இன்று) துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
11.05.2012 அன்று (இன்று) நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், திருவனந்தபுரம் செயின்ட் நிக்கோலஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில், 33ஆவது நிமிடத்தில் திருவனந்தபுரம் அணி வீரர் மண்ட் தனதணிக்கான முதல் கோலை அடித்தார்.
இரண்டாவது பாதியில், 44ஆவது நிமிடத்தில், தூத்துக்குடி அணி வீரர் முத்துமாரி தனதணிக்கான முதல் கோலை அடித்தார். 73ஆவது நிமிடத்தில், திருவனந்தபுரம் வீரர் ஜோஸ் இரண்டாவது கோலை அடித்தார். அதனையடுத்து, ஆட்டம் நிறைவுற ஒரேயொரு நிமிடம் எஞ்சியிருந்த நிலையில், தூத்துக்குடி வீரர் முத்துமாரி மீண்டும் ஒரு கோல் அடித்ததால், 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணியும் சமநிலை பெற்றன.
பின்னர், சமனுடைப்பில் (டை ப்ரேக்கர்) தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் செயின்ட் நிக்கோலஸ் அணியை வென்று, காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இப்போட்டியை, நகரின் பல பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி அணியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த ஓரிரு வீரர்களும் இடம்பெற்றிருந்ததால், ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு அந்த அணிக்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில், இன்று வெற்றி பெற்ற தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், நேற்று வெற்றி பெற்ற சென்னை மாநகர காவல்படை அணியும் களம் காணவுள்ளன.
தகவல் உதவி:
M.ஜஹாங்கீர். |